மியான்மார் மீதான கண்டனத் தீர்மானம் தோல்வி – சீனா முறியடித்தது

மியான்மாரில் ஏற்பட்ட இராணுவப் புரட்சிக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தை கொண்டுவருவதற்கு பிரித்தானியா மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் முற்பட்டபோதும் அதனை சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்துள்ளது.

நேற்று (2) இணையத்தள வழியாக மூடிய அறைக்குள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை நாடுகள் மியான்மார் இராணுவப்புரட்சிக்கு எதிராக கூடியிருந்தன. இதன் போது பிரித்தானியா கண்டனத் தீர்மானத்தை முன்வைத்திருந்தது.

15 உறுப்பினர்களை கொண்ட இந்த சபையில் 2 மணிநேரம் இடம்பெற்ற விவாத்தின் போது சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை நிறைவேற்றுவதை தடுத்துவிட்டது.

சீனாவுடன் இணைந்த ரஸ்யாவும் தமக்கு அதிக கால அவகாசம் வேண்டும் என தெரிவித்துள்ளது.

எனினும் இந்த தீர்மானம் தற்போதும் விவாதத்தில் உள்ளதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

மியான்மார் மீது தடைகள் ஏதும் விதிக்கப்படாத வெறும் கண்டனத்தீர்மானத்தையே சீனா முறியடித்துள்ளது மேற்குலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.