பெண் வேட்பாளர்கள் இல்லாத சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல்

இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்று வரை இலங்கையை இரண்டு பெண்கள் மட்டுமே ஆட்சி செய்துள்ளனர். இதில் ஒருவர் சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றது அவரின் மகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகிய இருவருமே இலங்கையை ஆட்சி செய்த பெண்களாவர்.

1960 1965, 1970 – 1977 மற்றும் 1994 – 2000 வரையான காலப்பகுதிகளில் உலகின் முதலாவது பெண் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்க இலங்கையில் பிரதமராக பதவி வகித்தார்.

இதே போன்று இவரின் மகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1994 ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை இலங்கையின் பிரதமராக பதவி வகித்தார்.

1994ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2005ஆம் ஆண்டு நவம்பர் வரையான காலப்பகுதி வரை இரண்டு முறை இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார்.

இதன்படி 1994ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை இலங்கையின் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் இரண்டு பெண்களே நாட்டை ஆட்சி செய்துள்ளனர். இவர்களைத் தவிர இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் எந்தவொரு பெண்ணும் பிரதமர் பதவியையோ அல்லது ஜனாதிபதி பதவியையோ வகிக்கவில்லை.

இந்த ஆண்டும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பெண் வேட்பாளர்கள் எவருமே போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படவில்லை.

chadrika mahi பெண் வேட்பாளர்கள் இல்லாத சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல்ஜனாதிபதிக்குரிய வேட்பாளர்கள் அறிவிப்பின் போது, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோத்தபயா ராஜபக்ஷவின் பெயர் கடந்த 11ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசா நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதே போல் ஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் கூட்டம் இன்று நடைபெறுகின்றது. தமது கட்சியின் வேட்பாளர் ஒரு ஆண் வேட்பாளர் என்று தன்னால் கூறமுடியும் என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித         ஹேரத் தெரிவித்திருக்கின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை இதுவரை தீர்மானிக்கவில்லை என அறிய முடிகின்றது.

தமிழ்க் கட்சிகள் உட்பட ஏனைய சிறிய கட்சிகள் கடந்த காலங்களில் பெரும்பான்மை கட்சிகள்  குறிப்பிடும் ஜனாதிபதி வேட்பாளருக்கே தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.

எனவே இந்த ஜனாதிபதி தேர்தலிலும் பெண் வேட்பாளர்கள் களமிறங்குவது சாத்தியமில்லை போல் தெரிகின்றது. தற்போது இலங்கை பாராளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 13 பேரே பெண் உறுப்பினர்களாக உள்ளனர். இலங்கை மக்கள் தொகையில் 52 வீதம் பெண்கள் இருந்த போதும் பாராளுமன்றத்தில் 5.8 வீதமே பெண் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

1982ஆம் ஆண்டிற்கு முன்னர் இலங்கையில் பிரதமர் ஆட்சியே காணப்பட்டது. அதற்குப் பின்னரே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை அமுலுக்கு வந்தது. இருந்தும் 1999ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஜனாதிபதி தேர்தலில் பெண் வேட்பாளர்கள் போட்டியிடவில்லை.

சட்டங்கள் நிறைவேற்றப்படும் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு சரியான அங்கீகாரத்தை வழங்க தயக்கம் தெரிவிக்கின்றமையே பெண்கள் தேர்தலில் போட்டியிட முன்வராமைக்கான காரணமாகும் என கொழும்பு மாநகரசபை உறுப்பினர் உமா சந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபை தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். அதற்கு முன்னர் பெண்களுக்கான அதிகார பங்கீடு குறித்து அதிகளவில் பேசப்பட்டாலும் 25வீத இலக்கு கிட்டத்தட்ட 23வீதத்தை அண்மித்த ஒரு உள்ளுராட்சி சபைத் தேர்தலாக அமைந்திருந்தது. உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 25 வீதம் என்ற இலக்கு இனிவரும் காலங்களில் 50 வீதம் என்ற இடத்திற்கு வரவேண்டும். ஜனாதிபதி தேர்தலிலும் பெண்கள் போட்டியிட வேண்டும் என்று உமா சந்திரா பிரகாஷ் மேலும் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பெண்கள்

தேர்தல்               வேட்பாளர்                  பெண் வேட்பாளர்கள்

எண்ணிக்கை

1982                         5                           பெண்கள் இல்லை

1988                          3                             சிறிமாவோ பண்டாரநாயக்க

1994                          6                             சந்திரிகா, சிறிமா திஸநாயக்க

1999                           13                           சந்திரிகா பண்டாரநாயக்க

2005                           13                           பெண்கள் இல்லை

2010                           22                           பெண்கள் இல்லை

2015                           19                           பெண்கள் இல்லை