தேர்தல் திருவிழா- யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்ய விரும்பும் ரணில்

அண்மையில் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மயிலிட்டி துறைமுகத்தை பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில்  கலந்து கொண்டார். இந் நிகழ்வில் அவர் உரையாற்றும் போது,

பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கு காணிகள் கையகப்படுத்தப்படும் என தெரிவித்தார். பலாலி மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்ய இந்தியாவுடன் பேச்சு நடத்தப்படும் என்றும், வடக்கு கிழக்கில் சுற்றுலாத்துறையை வளர்க்கும் நோக்கில் இரண்டு விமான நிலையங்களையும் அபிவிருத்தி  செய்யவுள்ளதாகவும், பலாலி ஒரு பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக வடக்கில் ஒரு படகுச் சேவையை அறிமுகப்படுத்தவும் தான் விரும்புவதாகவும், அத்துடன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்குரிய வேறு பல திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக அரசாங்கம் 14 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும், வடக்கு மாணவர்களுக்கு ரப் கணனிகள் வழங்கப்படும் என்றும், வடக்கின் கல்வி நிலையை உயர்த்த பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் நியமிக்கப்படுவர்.

வடக்கில் மேலும் 200 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும். யுத்தம் முடிவடைந்ததிலிருந்து 2009 முதல் இன்று வரை மொத்தம் 80,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

தனது குழந்தைப் பருவத்தில் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் விளங்கியது. ஆனால் போரின் காரணமாக அது அந்த அந்தஸ்தை இழந்து விட்டது. மீண்டும் அதை மீட்டெடுப்பேன் என உறுதியளிக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

இதே சமயம் பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்த காணிகளை கையகப்படுத்த இடமளிக்க மாட்டோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.

இந்தியாவை அனுசரித்துப் போவதன் மூலம் கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல்கள் போன்ற தாக்குதல்களைத் தடுக்கலாம் என்பதால் இந்தியாவுக்கு யாழ் பலாலி மற்றும் மட்டக்களப்பு விமானநிலையங்களை கொடுக்க இணக்கம் தெரிவித்துள்ளார் ரணில்.

அதேசமயம் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக வடபகுதி பாடசாலைச் சிறுவர்களுக்கு மடிக் கணணிகளை வழங்குவதற்கும் ரணில் திட்டமிட்டுள்ளார்.

தற்போது ஜே.வி.பி தனது வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில் தென்னிலங்கையின் பெரும்பான்மைக் கட்சிகள் சிறுபான்மைச் சமூகம் மீது தமது அக்கறைகளைக் காண்பிக்கத் தலைப்பட்டுள்ளன.