அதி சக்தி வாய்ந்த அணு ஆயுத ஏவுகணையை உருவாக்கியது ரஷ்யா

ரஷ்யா மிக அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுத ஏவுகணையை உருவாக்கியிருப்பதாகவும், எனினும் இதன் சோதனை தோல்வி அடைந்து விட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் ரஷ்யாவில் நேனோக்சா ஏவுகணை சோதனை மையம் அருகே இருக்கும் வைட்-சி என்ற பகுதியில் உள்ள அணு மின்னணு நிலையம் அருகே பெரிய விபத்து ஏற்பட்டது. அந்த மையத்திலிருந்து பெருமளவில் புகையும் நெருப்பும் வந்தது.

இந்த சம்பவம் பற்றி கருத்துத் தெரிவித்த ரஷ்யாவின் அணு சக்தி மையம், அணு மின்னணு நிலையத்தில் செய்யப்பட்ட சோதனையொன்று தவறாக முடிந்துள்ளது. இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை. சிறிய அளவில் அருகில் உள்ள ஊர்களில் அணுக் கதிர் வீச்சு இருக்கும். மக்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டது. இந்த விபத்தில் 5 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ரஷ்யாவில் வெடித்தது அணுஆயுதம் தான். கண்டிப்பாக அணுஉலை இல்லை. அவர்கள் அணுசக்தி மூலம் இயங்கக் கூடிய ஏவுகணையை சோதனை செய்துள்ளனர். அது வெடித்து கதிர் வீச்சு ஏற்பட்டுள்ளது. இதற்கான புகைப்பட ஆதாரங்கள் உள்ளது. அவர்களின் சோதனை தோல்வியடைந்தது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆனால் ரஷ்யாவோ  நாங்கள் ஏவுகணை ஒன்றை சோதனை செய்யும் போது வெடித்து விட்டது. ஆனால் அது அணு ஆயுதம் கிடையாது. இதனால் மக்களுக்கு அணுக்கதிர் பிரச்சினை கண்டிப்பாக இருக்காது என்றும் கூறியது.

இந்த நிலையில் அணுசக்தி மூலம் இயங்கக் கூடிய இந்த ஏவுகணையின் பெயர் ஸ்கைஃபால் (Skyfall) அல்லது உலக அழிவிற்கான ஆயுதம் (doomday weapon) அல்லது உலக அழிவிற்கான ஆயுதம் (doomday weapon) என்று அமெரிக்கா கூறுகின்றது.

இந்த ஏவுகணை உலகின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் தாக்கும். வானத்தில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் தாக்கும். இதன் திறனுக்கு முற்றுப்புள்ளியே கிடையாது. இந்த ஏவுகணை அணுசக்தி மூலம் இயங்குவதால் இதை அணு ஆயுத தாக்குதலுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அடுத்த படியாக இந்த ஏவுகணை ஏவப்பட்டு விட்டாலே அது கதிர் வீச்சை வெளியிட்டுக் கொண்டே செல்லும் அதாவது ஒரு நாட்டை தாக்காமல் அந்த நாட்டை கடந்து சென்றாலே அங்கு சிறிய அளவு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

ஆகவே இது போகும் வழியில் எல்லாம் கதிர் வீச்சு பாதிப்பு இருக்கும். அதனால் தான் இந்த ஏவுகணையை உலக அழிவிற்கான ஆயுதம் என்று கூறுகின்றார்கள்.

அமெரிக்காவின் தரப்பில் இதற்கு நிறைய ஆதாரங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்கா அப்படி எந்த விதமான ஆதாரத்தையும் இன்னும் சமர்ப்பிக்கவில்லை. அதே சமயம் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை இன்னும் ரஷ்யா நிராகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.