பிரியா-நடேஸ் குடும்பத்தை விடுதலை செய்ய, முன்னாள் பிரதமர் Malcolm Turnbull வலியுறுத்தல்

கிறிஸ்மஸ் தீவு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் குடும்பத்தினரை அவுஸ்திரேலியாவின் புதிய உள்துறை அமைச்சர் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி விடுதலை செய்யவேண்டும் என முன்னாள் பிரதமர் Malcolm Turnbull வலியுறுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் ABC தொலைக்காட்சியின்  Q+A நிகழ்வில் கலந்துகொண்டபோது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்ட விடயத்தினை வலியுறுத்தியிருந்தார்.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் எல்லைப்பாதுகாப்பு கொள்கை எனப்படுவதும் மிகவும் கடுமையானது என்பதை ஒப்புக்கொண்ட Malcolm Turnbull, பிரியா-நடேஸ் குடும்பத்தினரது தடுப்பு விடயத்தில் பரிவையும் மனிதாபிமானத்தையும் கொஞ்சமாவது காண்பிக்கவேண்டும் என்றார்.

பிரியா-நடேஸ் தம்பதிகளையும்  அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது குழந்தைகளையும் குயின்ஸ்லாந்துக்கு அனுப்புவதே சரியான முடிவாக இருக்கமுடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரியா-நடேஸ் குடும்பத்தினர் தடுப்புக்கு கொண்டுசெல்லப்படும்போதும், அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த கடைசிநேரத்தில் வழக்கொன்றின் மூலம் தடுத்துநிறுத்தப்பட்டபோதும் Malcolm Turnbull பிரதமராக பொறுப்பிலிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி – எஸ்.பி.எஸ்