மாகாணசபை தேர்தலை பிற்போடுவதற்கு கடந்த கால அரசாங்கங்கள் மேற்கொண்டதைப்போன்றே தற்போதுள்ள அரசாங்கமும் நடவடிக்கை எடுத்துவருவதாகவே தெரிகிறது. அதனால் அரசாங்கம் பழைய முறையிலாவது மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என தேர்தல்கள் கண்காணிப்பு குழுக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தன.
தேர்தல்கள் கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து கடந்து (30) வியாழக்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு கோரிக்கை விடுத்தன.
அங்கு கருத்து தெரிவித்த பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி குறிப்பிடுகையில்,
மாகாணசபை தேர்தல் மூலம் மக்களுக்கு தங்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்து கொள்ளும் ஜனநாயக உரிமை 10 வருடங்களுக்கு அதிக காலம் இல்லாமலாக்கப்பட்டிருக்கிறது. மாகாணசபை தேர்தலை பிற்போடும் நடவடிக்கை 2017ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டது. அந்த நடவடிக்கையை தற்போதுள்ள அரசாங்கமும் அவ்வாறே முன்னெடுத்துச்செல்லும் போக்கையே காணக்கூடியதாக இருக்கிறது. இலங்கை வரலாற்றில் அதிகாரத்தில் இருந்துவந்துள்ள ஆட்சியாளர்கள் தேர்தல் வரைபடத்தை தங்களின் அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்ளும் வகையிலே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
ஆனால் கடந்த கால ஆட்சியாளர்கள் தேர்தலை கட்டம் கட்டமாக நடத்தவும் அல்லது உரிய காலத்துக்கு முன்னரே நடத்தியுமே தங்ககளின் அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வந்திருக்கிறார்கள். ஆனால் யாரும் தேர்தலை நடத்தாமல் பிற்போடவில்லை. ஆனால் தற்போது மாகாணசபை 10 வருடங்கள் வரை பிற்போடப்பட்டுள்ளதன் மூலம் மோசமான நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.. தற்போதுள்ள அரசாங்கம் தங்களது தேர்தல் கொள்கை பிரகடனத்தில், ஒரு வருடகாலத்துக்குள் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை தேர்தலை நடத்தி முடிப்பதாக குறிப்பிட்டிருக்கிறது.
மாகாணசபை தேர்தலை நடத்த முடியாமல் பிற்போடுவதற்கான காரணம் அனைவருக்கும் தெரியும். இந்த அரசாங்கமும் அதனை நன்கு தெரிந்துகொண்டே ஒரு வருட காலத்துக்குள் நடத்துவதாக தெரிவித்திருந்தது. அவ்வாறு இருந்தும் அரசாங்கம் கடந்த கால ஆட்சியாளர்களைப்போலவே தேர்தலை பிற்போடும் நடவடிக்கையையே மேற்கொண்டு வருவதன் மூலம், ஆட்சியில் இருந்துள்ள அரசாங்கங்கள் அனைத்தும் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள ஒரே மாதிரியே செயற்பட்டு வந்திருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
அதேநேரம் மாகாணசபை தேர்தலை எந்த முறையில் நடத்துவது என தீர்மானிக்க, பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட்டு, அதற்கு மூன்று மாத காலம் வழங்கப்பட்டிருந்தது. என்றாலும் மூன்று மாத காலம் முடிவடைந்த பின்னர் மீண்டும் மூன்று மாதங்களுக்கு அதன் காலத்தை நீடித்திருக்கிறது. பாராளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கையை இலகுபடுத்தும் வகையில் பெப்ரல் அமைப்பு கடந்த மாதம் அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களை அழைத்து, நடத்திய பேச்சுவாரத்தையின்போது, மாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்த அனைத்து அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டை பெற்றுக்கொண்டு, அதனை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அறிவிக்க தீர்மானிக்கப்பட்டது.
எனவே அரசாங்கம் தொடர்ந்தும் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு தொழிநுட்ப பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்தால், அது உண்மையில் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு தெரிவிக்கப்படும் காரணமாகவே நாங்கள் காண்கிறோம். அதனால் மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்தி, மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.



