இந்தியாவிலிருந்து  அவுஸ்திரேலியா திரும்புபவர்களை அனுமதிக்குமாறு கோரிக்கை

இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா திரும்பும் பயணிகளுக்குத் தடைவிதிக்காமல் அவர்களை தொடர்ந்தும் அனுமதிக்க வேண்டும் என இந்திய சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்துச்செல்லும் பின்னணியில், இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா வருவதற்கு இடைக்கால தடைவிதிக்கப்பட வேண்டும் அல்லது அங்கிருந்து வருவதற்கு அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும் என மேற்கு அவுஸ்திரேலிய அரசு வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில், இதனை ஏற்றுக்கொண்ட அவுஸ்திரேலிய அமைச்சரவை இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா வரும் விமானங்களின் எண்ணிக்கையை 30 வீதத்தால் குறைக்கவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவிலுள்ள தனிமைப்படுத்தல் மையங்களில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுவோரில் இந்தியாவிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாலேயே இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக பிரதமர் Scott Morrison தெரிவித்தார்.

இந்தநிலையில் இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா வருபவர்களை அரசு தொடர்ந்தும் அனுமதிக்க வேண்டுமெனவும் ஆகக்குறைந்தது மனிதாபிமான அடிப்படையிலாவது அங்கிருந்து பயணிகள் வருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென அவுஸ்திரேலிய இந்திய சமூகத்தினர்  கோரிக்கை விடுத்துள்ளனர்.