‘நான்கு சுவற்றிற்குள் சாதிப் பெயரைச் சொல்லி திட்டலாம்’ – உச்சநீதிமன்றம்

நான்கு சுவற்றிற்குள்,  ஒருவருடைய சாதிப்பெயரைச் சொல்லி திட்டினால் அது குற்றமாகாது என்று இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

ஒரு பெண்ணை அவருடைய வீட்டினுள் சாதிப் பெயரைப் பயன்படுத்தி திட்டியவருக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கை இரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.

“ஒரு நபருக்கு எதிராக நடக்கும் எல்லா அவமதிப்புகளையும், அச்சுறுத்தல்களையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாக பார்க்க முடியாது. அவர் பட்டியல் சாதி அல்லது பட்டியல் பழங்குடியினர் என்பதற்காக அவ்வாறு நடந்திருந்தால் மட்டுமே அது குற்றமாகும்” என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பின்தங்கிய சமூகத்தை சேர்ந்தவர்களை, பொது வெளியில் அனைவரின் முன்னிலையிலும் அவமானப்படுத்துதல் மற்றும் துன்புறுத்துதல் போன்ற செயல்களை செய்தால் மட்டுமே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்த முடியும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

ஹித்தேஷ் ஷர்மா என்பவருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்துள்ள உச்சநீதிமன்றம், அவர் மீதான பிற குற்றங்களுக்காக சாதாரண சட்டப்பிரிவின் கீழ், சம்பந்தப்பட்ட நீதிமன்றம் விசாரிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

இந்த வழக்கில், 2008-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைச் சுட்டிக்காட்டியுள்ள நீதிபதிகள், பொது இடத்தில் கருத்து தெரிவிப்பதற்கும், பொதுமக்களின் முன்னிலையில் கருத்து தெரிவிப்பதற்கும் இடையிலான வேறுபாட்டை உச்சநீதிமன்றம் சரியாக வகுத்துள்ளது என்று கூறியுள்ளனர்.

வீட்டின் சுற்றுச்சுவருக்கு வெளியிலிருந்தோ அல்லது தெருவிலிருந்தோ யாரேனும் பார்க்கும்படி, வீட்டின் முற்றத்திலோ அல்லது வீட்டிற்கு வெளியிலோ இந்த குற்றம் நடைபெற்றிருந்தால் அதை நிச்சயமாக பொதுமக்கள் முன்னிலையில் நடந்ததாக கூறலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர், வீட்டின் நான்கு சுவருக்குள் அந்தப் பெண்ணை திட்டியுள்ளார் என்று முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் நண்பர்கள், உறவினர்கள் உட்பட பொதுமக்கள் யாரும் அங்கு இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள நீதிமன்றம் ஆகவே இது குற்றமாகாது என்று தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றம் நான்கு சுவர்களுக்குள் நடைபெற்றுள்ளதாக கூறியுள்ள நீதிமன்றம், 2008-ம் ஆண்டு ஸ்வரன் சிங் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, இதை பொது வெளியில் அனைவரின் முன்னிலையிலும் நடந்ததாக கூறமுடியாது என்று தெரிவித்துள்ளது.

முதல் தகவல் அறிக்கையின்படி, உத்தர் காண்ட் மாநிலத்தை சேர்ந்த வர்மா என்பவரின் குடும்பத்திற்கும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் இடையில் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. பாதிக்கப்பட்டப் பெண் வர்மாவுக்கு பணம் தர வேண்டியிருந்ததாகவும், அதற்காக அந்தப் பெண்ணின் நிலத்தில் அவரை கடந்த 6 மாதங்களாக விவசாயம் செய்யவிடாமல் வர்மா தடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

நிலம் தொடர்பான வழக்கு, சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், நிலத் தகராறு தொடர்பாக எழும் பிரச்சனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வராது என்று கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் பட்டியல் சாதியை அல்லது பழங்குடியினத்தை சேர்ந்தவர் என்பதற்காக, அவர் மிரட்டப்பட்டாலோ அல்லது துன்புறுத்தப்பட்டாலோ மட்டுமே வன்கொடுமை சட்டத்தை பயன்படுத்த முடியும் என்று நீதிபதிகள் எல்.நாகேஷ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி அடங்கிய அமர்வு தீர்ப்பில் தெரிவித்துள்ளது.