அமெரிக்க அதிபர் தேர்தல் – முடிவுகளை அறிவிப்பதில் ஏன் இந்த இழுபறி?

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வருகின்றது.

இது வரையில் ட்ரம்ப் 214 இடங்களிலும் ஜோ பைடன் 264 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

மெரிக்க அதிபர் தேர்தலில் வாக்கு வித்தியாசம் மாற்ற முடியாத அளவுக்கு அதிகமாக உள்ள மாநிலங்களில், எந்தத் தரப்பு வெற்றி பெற்றுள்ளது என்பதை கணித்து அறிவிக்கின்றன, ஊடக நிறுவனங்கள்.

இந்நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 264 தேர்தல் குழு வாக்குகளையும், இப்போதைய அதிபர் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் 214 தேர்தல் குழு வாக்குகளையும் இதுவரை வென்றுள்ளனர் என்று சிஎன்என் கணித்துள்ளது.

இந்தத் தேர்தல் இழுபறியை 2000 ஆண்டில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அப்போதைய துணை அதிபர் அல் கோர்-ம், குடியரசுக் கட்சி வேட்பாளராக ஜார்ஜ் புஷ்ஷூம் போட்டியிட்ட தேர்தலுடன் ஒப்பிட முடியாது என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

2000-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் வாக்குகள் அனைத்து எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், வாக்குகளை மறு எண்ணிக்கை செய்வது தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன, ஒரு மாத காலத்துக்கும் மேலாக முடிவு அறிவிப்பதற்கு தாமதமானது.

இந்தத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்னும் முடிவடையாத நிலையில், முடிவை கணிக்க முடியாத மாநிலங்களில், நெவாடாவிலும் அரிசோனாவிலும் ஜோ பிடனும், பென்சில்வேனியாவிலும் ஜார்ஜியாவிலும் வட கரலினாவிலும் டொனால்ட் ட்ரம்பும் வாக்கு எண்ணிக்கையில் முன்னணியில் உள்ளனர்.

ஜோ பிடன், தான் முன்னிலையில் இருக்கும் அரிசோனா (11), நெவாடா (16) இரு மாநிலங்களிலும் முன்னிலையை தக்க வைத்து வெற்றி அடைந்தால் அதிபர் தேர்வுக்கு தேவையான 270 தேர்தல் குழு வாக்குகளை பெற்று விடுவார். அல்லது பென்சில்வேனியா மாநிலத்தில் வெற்றி பெற்று 20 தேர்தல் குழு வாக்குகளை பெற்றாலும் 270 வாக்குகளுடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவார்.