தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டன -தாதிமார் சங்கம் கவலை

மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டதால் நெருக்கடி நிலை காணப்படுகின்றது என அரசதாதிமார் அலுவலக சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 103,487 ஆகவும் அதிகரித்துள்ளது. அதே நேரம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 655 ஆக உயர்வடைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து “பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்“ என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனாவைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து தீவிரகிசிச்சை பிரிவுகளில் படுக்கை வசதிகளிற்கான தேவை அதிகரித்துள்ளது என சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்த சமன் ரத்னப்பிரிய, “இந்த நெருக்கடிக்கு உடனடியாக தீர்வை காண வேண்டும். அரசாங்கம் தீவிரகிசிச்சை பிரிவுகளில் படுக்கை வசதிகளை அனுமதித்துள்ளதாக தெரிவித்தாலும் 18 படுக்கைகள் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளன. .
மேல்மாகாணத்தில் நாளாந்தம் கொரோனாவைரஸ் 900 நோயாளர்கள் அனுமதிக்கப்படுகின்ற போதிலும், தீவிரகிசிச்சை பிரிவுகளில் 193 கட்டில்கள் மாத்திரமே காணப்படுகின்றன.
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற நிலையில், எதிர்காலத்தில் கொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளை எங்கு அனுமதிக்கப் போகின்றீர்கள்”  என்றார்.