புர்கா தடை: ‘முஸ்லிம்களை நசுக்கும் ஒரு செயல்’ – முஸம்மில் முகைதீன்

தொடர்ச்சியாக முஸ்லிம்களை நசுக்கும் செயலாக புர்கா தடை தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது எனத் தெரிவித்த தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் முகைதீன், இது உரிமைகளை மீறும் செயலாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து,  11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை கடந்த 13ம் திகதி இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து மேற்குறிதத தாக்குதலில் தற்கொலை குண்டுத்தாரிகளுக்கு ஆதரவு வழங்கியதாக குற்றம் சுமத்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியூதீன் ஆகியோர்  கடந்த 24ம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நிகாப், புர்கா மற்றும் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்குத் தடைவிதிப் பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,முள்ளிப்பொத்தானையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (28)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,  “சிறுபான்மை சமூக உரிமைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். இதற்காக சிறந்த எதிர்க் கட்சி தேவை. முஸ்லிம்களின் வாக்குகளை பெற்ற சஜீத் பிரேமதாச போன்றோர்களும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்” என்றார்.