தி.மு.க-வை வளர்த்ததும், ஆட்சியில் அமர்த்தியதும் எம்.ஜி.ஆர் தான் – சென்னை மாநகர முன்னாள் மேயர்

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவர் ஆற்றிய மக்கள் பணிகள் குறித்து சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி நினைவுகூர்ந்துள்ளார்.  

“தமிழகத்தில் தி.மு.க இயக்கத்தை வளர்த்ததும், ஆட்சியில் அமர்த்தியதும் புரட்சித்தலைவர்  எம்.ஜி.ஆர் தான். இதனை அடுத்த தலைமுறைக்கு விளக்கவேண்டிய கடமை என்னைப் போன்ற எம்.ஜி.ஆர்  கொள்கைவாதிகளுக்கு இருக்கிறது.

26 படங்களில் நடித்து புகழ்பெற்ற கலைஞராக விளங்கிய புரட்சித்தலைவர், 1952-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவுடன் இணைந்தார். ஞானிகள், சிந்தனையாளர்கள் மற்றும் அனைத்து மதங்களிலும் உள்ள சிறந்த கருத்துகளை எளிமையாக்கி, தன்னுடைய திரைப்படம் மூலம் மக்களுக்கு வழங்கிய  எம்.ஜி.ஆர், திரையரங்குகளை பாடசாலையாக மாற்றினார்.

நேர்மை, பாசம், நாட்டுப்பற்று, பெரியோரிடம் மரியாதை, தனிமனித ஒழுக்கம், மனிதநேயம் போன்றவற்றை மக்களுக்கு சொல்லித்தரும் வாத்தியாராக விளங்கினார். பாட்டுப்புத்தகம், பாடல் வரிகள், வசனங்கள், காட்சி அமைப்பு மூலம்  தி.மு.க கொடி, சின்னம், கொள்கைகளை பட்டிதொட்டியெங்கும் பரப்பி, அண்ணாவின் இதயக்கனியாகவே மாறினார்.

புரட்சித்தலைவரின் பிரசாரம் காரணமாகவே, 1957-ம் ஆண்டு முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்ட  தி.மு.க 15 இடங்களில் வெற்றியும், 1962-ம் ஆண்டு 50 இடங்களில் வெற்றியும் பெற்று பீடுநடை போட்டது.

1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில்  தி.மு.க பெரும் வெற்றியடைந்து, அண்ணா ஆட்சியில் அமர்ந்தார் என்றால், அந்த வெற்றிக்கு முழு காரணமும் எம்.ஜி.ஆர்.தான். ஆம், அப்போது தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு கழுத்தில் கட்டுப்போடப்பட்ட போஸ்டர்கள் மட்டுமே ஒட்டப்பட்டன.

போஸ்டரில் அந்த காட்சியை கண்டு கதறிய மக்கள் தி.மு.காவுக்கு வாக்குகளை அள்ளிக்குவித்தார்கள். அதனால்தான், அண்ணாவை பாராட்ட மாலையுடன் வந்த கட்சி பிரமுகர்களிடம், ‘மாலைக்கு சொந்தக்காரர் ராயப்பேட்டை மருத்துவமனையில் இருக்கிறார்’ என்று எம்.ஜி.ஆரிடம் அனுப்பிவைத்தார். மேலும், புரட்சித்தலைவர் ஒப்புதலுடனே அமைச்சரவை பட்டியலையும் வெளியிட்டார். அண்ணா இல்லாத நிலையிலும், 1971-ம் ஆண்டு தேர்தலில் எம்.ஜி.ஆரின் பரப்புரையால்   தி.மு.க கூட்டணிக்கு 205 இடங்கள் கிடைத்தன.

கருணாநிதியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு,  தி.மு.காவில் இருந்து எம்.ஜி.ஆர் 1972-ம் ஆண்டு நீக்கப்பட்டதும், தமிழகம் காணாத மாபெரும் புரட்சியும், எழுச்சியும் உருவானது. அடுத்து நடந்த திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில்  அ.தி.மு.க முதல் வெற்றியைப் பெற்றது. அந்த தேர்தலில், பெரும்பான்மை பலத்துடன் இருந்த தி.மு.க., மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. அதன்பிறகு, புரட்சித்தலைவர் உயிருடன் இருந்த வரையிலும் கருணாநிதியால் ஆட்சிக்கு வரவே முடியவில்லை.

1977-ம் ஆண்டு புரட்சித்தலைவரின் கூட்டணிக்கு 142 இடங்கள் கிடைத்தன. 1980-ம் ஆண்டு 162 இடங்கள், 1984-ம் ஆண்டு 195 இடங்கள் என்று நாளுக்குநாள் செல்வாக்கு வளர்ந்துகொண்டே இருந்தது. மக்களின் அமோக ஆதரவுக்கு காரணம், அவர் உழைத்து சம்பாதித்த அத்தனை செல்வத்தையும், சாதி, மத, இன பாகுபாடு பாராமல் மனிதநேயத்துடன் அள்ளியள்ளிக் கொடுத்ததுதான். ‘ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்’ என்று சினிமாவில் பாடியதை நிஜ வாழ்க்கையில் செய்து காட்டினார். புரட்சித்தலைவரின் 10 ஆண்டு கால ஊழலற்ற அறம்சார்ந்த ஆட்சியில் சில துளிகள் இங்கே.

* தனியார் ரேஷன் கடைகளில் நடக்கும் தவறுகளை, ‘நம் நாடு’ படத்தில் காட்சிப்படுத்தி இருந்தார் புரட்சித்தலைவர். அந்த தவறுகள் நடைபெறாத வகையில், அரசு மூலமாக 22 ஆயிரம் முழுநேர நியாயவிலைக் கடைகளைத் திறந்து எல்லோருக்கும் எல்லாமும் கொடுத்தார்.

* ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தார். பள்ளியில் பயிலாத 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கும் சத்துணவு வழங்கப்பட்டது.

* மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச காலணி, இலவச பாடப்புத்தகம், இலவச பல்பொடி வழங்கப்பட்டன. கல்வி சீர்திருத்தமாக +2 பாடத்திட்டம், மருத்துவப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு அறிமுகமாயின. தனியார் பொறியியல் கல்லூரிகளை அனுமதித்த கல்விக்கொள்கையால்தான், இன்று உலகமெங்கும் தமிழர்கள் ஐ.டி. துறையில் பெரும் சாதனை புரிந்துவருகிறார்கள்.

* தமிழகத்தில் 49 சதவீதம் என்று இருந்த இடஒதுக்கீட்டை 68 சதவீதம் என உயர்த்தியதும் புரட்சித்தலைவர்தான்.

* சைக்கிளில் டபுள்ஸ் செல்வது தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. ஏழைகள் பாதிக்கப்படுவதை அறிந்ததும் சைக்கிளில் டபுள்ஸ், சந்தேக கேஸ் போன்றவற்றை ரத்து செய்தார்.

* குடிசைகளுக்கு ஒரு விளக்கு திட்டமும் பின்னர் இரு விளக்கு திட்டமும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும் தந்தவர் எம்.ஜி.ஆர் தான்.

* தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு ஓர் அவசரச்சட்டம் கொண்டுவந்தார். அதன்படி, மதுவிலக்கு சட்டத்தின் கீழ் முதல் முறை பிடிபட்டால் 3 ஆண்டுகள் சிறை, இரண்டாவது முறை பிடிபட்டால் 7 ஆண்டுகள் சிறை, மூன்றாவது முறை பிடிபட்டால் நாடு கடத்தப்படுவார்கள் என்று அறிவித்தார். இன்று தமிழகம் குடியில் மூழ்கிக்கிடக்கிறது என்றால், அன்று புரட்சித்தலைவரின் புதுமை சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் தடுத்த எதிர்க்கட்சிகள்தான் காரணம்.

ஏழைகளுக்காகவே ஆட்சி புரிந்த புரட்சித்தலைவர் ஓர் அதிசயம். அவர் ஓர் அற்புதம். அவர் ஓர் அவதாரம். காந்தசக்தியுடைய முகவெட்டு, கட்டிளங்காளை போன்ற உடற்கட்டு, தோற்றப்பொலிவுடன் கண்ணுக்குத் தெரியாத மின்சார சக்தியாக இன்றும் தமிழக மக்களுடன் கலந்திருக்கிறார் புரட்சித்தலைவர். ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும்’ என்று பாடியதற்கு உதாரணமாக வாழ்ந்த புரட்சித்தலைவருக்கு இணையாக இந்த மண்ணில் இதுவரை யாரும் தோன்றவில்லை, இனியும் தோன்றப்போவதுமில்லை. மண்ணுலகில் கடைசி மனிதன் இருக்கும் வரையிலும் புரட்சித்தலைவரின் புகழ் நிலைத்து நிற்கும்.” என்று தெரிவித்துள்ளார்.