ஜோ பைடனிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை- ரஷ்யா

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனிடம் தாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை என்று  ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூறும்போது, “அமெரிக்க அதிபராகப் புதிதாக தேந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனிடம் நாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. மேலும் அங்கிருந்து நல்ல விஷயங்களை எதிர்பார்ப்பதும் தவறு” என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பினும் உலக நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்களைத் தீர்க்க இரு நாடுகளும் உதவ முடியும் என்று நம்புகிறோம் என்று ரஷ்ய அதிபர்  புதின் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர்.

வெற்றிக்கு 270 பிரதிநிதிகள் வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 290 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றதையடுத்து ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றார். அதிபர் ட்ரம்ப் 214 பிரதிநிதிகளின் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

ஜனவரி 20-ம் திகதி வரை ட்ரம்ப் அதிபர் பதவியில் இருப்பார். அதன் பிறகு ஜனநாயகக் கட்சியின் சார்பில் புதிய அதிபராகத் ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார்.

இந்த சூழலில், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனிடம் தாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை என்று  ரஷ்யா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.