உய்குர் இன மக்களை கட்டாய வேலையில் ஈடுபடுத்தும் சீனா

சீனாவில் வடமேற்கு சின்ஜியாங் பிராந்தியத்தில் இலட்சக் கணக்கான உய்குர் இன சிறுபான்மையினர் கையால் பருத்தியை எடுக்க நிர்ப்பந்திக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது அரசின் ஒரு தொழிலாளர் திட்டத்தின் மூலம் நடைமுறைப் படுத்தப்படுவதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்ஜியாங் பிராந்தியத்தில் சட்டவிரோத தடுப்பு முகாம்கள் அதிகமாக உள்ளன என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கு குறைந்தது 10 இலட்ச மக்கள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கான தொழில் பயிற்சி மையங்களே இங்கு உள்ளதாகச் சீன அரசு வாதிடுகிறது.

வாஷிங்டனை தளமாகக் கொண்ட “உலகளாவிய கொள்கைக்கான மையம்” (Center for Global Policy) எனும் சிந்தனைக் குழு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இணைய தளத்தில் கிடைக்கும் அரசு ஆவணங்களை ஆராய்ந்து இந்த அறிக்கையை அது வெளியிட்டுள்ளது.

அதில், 2018ம் ஆண்டு, உய்குர் இன சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மூன்று பகுதிகளிலிருந்து குறைந்தது 5,70,000 பேர் கையால் பருத்தியை எடுக்கும் வேலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இது அரசு நடத்தும் கட்டாய தொழிலாளர் பரிமாற்ற திட்டத்தின் கீழ் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல இலட்சக் கணக்கானோர் பருத்தியை பறிக்க நிர்ப்பந்திக்கப்படுவதாக நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.

உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் பருத்தியில் 20 சதவீதம் சின்ஜியாங் பிராந்தியத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றது.

மேலும் அனைத்து தொழிலாளர்களும் மையங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக சீன அரசு கூறுகிறது. ஆனால் பல முன்னாள் முகாம் வாசிகள் திறன் குறைவான தொழிற்சாலை வேலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவை பெரும்பாலும் முகாம்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.