திருத்தந்தை பிரான்சிஸ் இன்று ஈராக்குக்கு திருப்பயணம்

உலக கத்தோலிக்க மக்களின் ஆன்மீகத் தலைவர் 84 வயதுடைய திருத்தந்தை பிரான்சிஸ், போரினால் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட ஈராக் நாட்டுக்கு இன்று ‘அமைதிக்கான திருப்பயணி’ யாக தனது திருப்பயணத்தை மேற்கொள்கிறார்.

கோவிட்-19 நோய்த்தொற்று உலகை ஆக்கிரமித்ததன் பின்னர் திருத்தந்தை ஆரம்பிக்கும் முதலாவது திருப்பயணம் இதுவாகும். திருத்தந்தையின் ஈராக் திருப்பயணத்தைக் கௌரவிக்கும் முகமாக ஈராக்கின் இஸ்லாம் ஆயதக்குழுக்களில் ஒன்றான ‘குருதிப்படையின் பாதுகாவலா’ என அறியப்படும் (Gurardians of Blood Brigade) ஓர் போராட்டக்குழு தற்காலிக ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்தை அறிவித்திருக்கின்றது.

ஈராக் நாட்டை ஒரு கத்தோலிக்க திருத்தந்தை தரிசிப்பது இது வரலாற்றில் முதல் தடவை என்பதால் திருத்தந்தையின் இப்பயணம் தொடர்பாக ஈராக்கில் அதிக ஆர்வம் காணப்படுகிறது.

இன்று ஈராக் நேரம் பி.ப. 2.00 மணிக்கு பாக்தாத்தை வந்தடையும் திருத்தந்தை நான்கு நாட்களுக்கு அங்கு தங்கியிருப்பார். இன்று நாட்டின் பிரதம மந்திரியான முஸ்தபா அல் கதிமியை தனிப்பட்ட விதமாகச் சந்திக்கும் திருத்தந்தை நாளை ஷியா முஸ்லிம்களின் முக்கிய ஆன்மீகத் தலைவiரான பெரிய அயத்தொல்லா அலி அல் ஹூஸ்யானி அல் சிஸ்தானியைச் சந்திப்பார்.

தனது திருப்பயணத்தின் போது திருத்தந்தை தன்னாட்சியதிகாரம் கொண்ட பிரதேசமான குர்திஸ்தானுக்குச் சென்று அங்குள்ள ஆட்சியாளர்களையும் சந்திப்பார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இஸ்லாமிய தீவிரவாதிகளினால் பலவிதமான துன்பங்களை அனுபவித்த ஈராக்கில் வாழும் கிறிஸ்தவ மக்கள் திருத்தந்தையின் இத்திருப்பயணத்தை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.