மட்டக்களப்பில் 3ம் நாளாக தொடரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு, மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தின் நீதியை எதிர்பார்த்து முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு தமிழ் தேசிய உணர்வாளர்களை ஆதரவு வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணர்வு தவிர்ப்பு போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் புதன்கிழமை ஆரம்பமான போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்றும் நடைபெற்றுவருகின்றது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பெருமளவானோர் ஆதரவு வழங்கிவருகின்றனர்.
IMG 0052 மட்டக்களப்பில் 3ம் நாளாக தொடரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்
நான்கு கோரிக்கைகளை சர்வதேச சமூகத்திடம் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டம் ஐநா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் நிறைவுபெறும் வரையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
வடகிழக்கில் தமிழ் மக்களுக்கு நடைபெற்ற அநீதிகளுக்கு உள்ளக ரீதியாக எந்தவித நீதியும் கிடைக்கப்போவதில்லையெனவும் சர்வதேச நீதிமன்றில் இலங்கை நிறுத்தப்பட்டு தமக்கான நீதியைப்பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என இங்கு கோhரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இன்றைய தினம் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள்,பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள்,மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஆதரவு வழங்கிவருகின்றமை குறிப்பிடத்கக்கது.
IMG 0039 மட்டக்களப்பில் 3ம் நாளாக தொடரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்
இந்நிலையில், இனப் படுகொலை புரிந்த சிறீலங்கா அரசிற்கு மேலும் கால அவகாசம் வழங்க சர்வதேசம் முனைந்துள்ளமையை எதிர்த்து, சிறீலங்காவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக்கோரி அம்பிகை செல்வகுமாரினால் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்றுடன் 7ம் நாளை எட்டியுள்ளது. அவருடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழர் தாயகத்தில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.