மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை வழக்கு ஒத்தி வைப்பு

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை வழக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு தொடர்பில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் பண்ணையாளர்களினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லாவினால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏற்கனவே பிரதிவாதிகளுக்கான தமது கருத்துகளை பதிவுசெய்வதற்கான தவணை வழங்கப்பட்டிருந்ததாகவும் இன்றைய தினம் 13வது 14வது பிரதிவாதிகள் தமது கருத்துகளை பதிவுசெய்துள்ளதாகவும் 03வது 12வது ஆகிய பிரதிவாதிகள் இன்றைய தினம் ஆஜராகவில்லையென பண்ணையாளர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி டி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.

ஏற்கனவே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெற்றுவருவதாகவும் அந்த வழக்கின் தீர்ப்பு வந்ததன் பின்னர் இந்த வழக்கினை கொண்டுசெல்லமுடியும் என தெரிவித்திருந்ததன் காரணமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதன் காரணமாக இது தொடர்பில் எந்தவித கட்டளையினையும் ஆக்கமுடியாது என கூறியிருந்தார்.

இதன்போது மேய்ச்சல் தரையில் மூன்று மாடுகள் காயப்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளது, 60மாடுகள் பலாத்காரமாக பிடிக்கப்பட்டுள்ளது, உள்ளபடியே நீடிப்பதற்கான நெறிப்படுத்தலை வழங்குமாறும் கூறியபோது இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதன் காரணமாக இது தொடர்பில் எந்தவித கட்டளையினையும் ஆக்கமுடியாது எனவும் இந்த வழக்கினை மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு வந்ததன் பின்னர் இது தொடர்பான தீர்மானம் எடுப்பதற்காக ஜுன் மாதம் 02ஆம் திகதிக்கு வழக்கினை அழைப்பதாக நீதிபதி அறிவித்ததாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.

மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரை பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள் தொடர்பாக ஏற்கனவே அரச சட்டத்தரணியினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உள்ளபடியே பராமரிப்பதற்கான இணக்கம் தொடர்பில் எந்தவித கட்டளையும் ஆக்கப்படவில்லை.இருந்தபோதிலும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லையென்பதை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம்.

அதுமட்டுமன்றி கடந்த மாதம் 28ஆம் திகதியுடன் அங்கிருக்கின்ற பயிர்ச்செய்கையாளர்கள் விலகிவிடுவார்கள் என்ற பத்திரிகை செய்தியிருந்தது. எனினும் பத்திரிகை செய்திகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என மன்று தெரிவித்ததுடன் அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஆவணங்களை கேட்டிருந்தது.இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கு ஆவணத்தினை எடுத்து வழங்கவுள்ளோம்.