தமிழ் தலைமைகள் நேர்மையாக செயற்பட்டால், அரசியல் கைதிகளுடைய விடுதலை சாத்தியமாகும்- கஜேந்திரன் பா.உ

தமிழ் தலைமைகள் நேர்மையாக தமிழ் மக்களுடைய நலன்களின் அடிப்படையில் செயற்பட்டாலே அனைத்து அரசியல் கைதிகளுடைய விடுதலையும் சாத்தியமாக்க முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக இலக்கு செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கைதிகளாக இருப்பவர்கள், எங்களுடைய சொந்தங்கள், தமிழ் உறவுகள். தமிழ் தேசத்தினுடைய விடுதலைக்காக, போராடிய முன்னாள் போராளிகளும் இருக்கிறார்கள். அதே நேரத்தில், போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்தமைக்காக, அல்லது ஆதரவு கொடுத்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களும் இருக்கிறார்கள். அனைவரும் இந்த கொடிய பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்.

அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது எங்களுடைய நீண்ட கால கோரிக்கை. அதற்காகப் பலப் போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். சர்வதேச சமூகத்துடனும் அந்த கருத்துக்களை நாங்கள் வலியுறுத்தி வந்திருக்கின்றோம். சிறைச்சாலைகளுக்கும் சென்று அந்த கைதிகளுடைய நலன்கள் சார்ந்த விடயங்களில் அக்கறை கொண்டு, செயற்பட்டு வந்திருக்கின்றோம். புலம்பெயர்ந்த தமிழ் உறவுகளோடு இணைந்த வகையிலே இந்த செயற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டு வந்திருக்கின்றோம்.

அந்தவகையில்,  தற்போது 16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சியான விடயம். இந்த  விடுதலை, ஒரு நல்லெண்ண நோக்கத்தில் நடைபெறவில்லை. மாறாக, தமிழ் மக்கள் மீது, இனப்படுகொலையை மேற்கொண்டிருக்கின்ற கோட்டாபாய அரசாங்கம் தமிழர்களுடைய, தேசத்தையோ, இறமையையோ, சுயநிர்ணய உரிமையையோ அங்கீகரிக்க அடிப்படையிலான, ஒரு சமஸ்டி தீர்வை வழங்குவதற்கு தாயார் இல்லை. சிங்கள குடியேற்றங்களையோ, பௌத்த மயமாக்கலையோ நிறுத்துவதற்கும் தயாராக இல்லை. தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு, ஒரு பொறுப்பு கூறல் செய்வதற்கும் தயார் இல்லை.

அதே வேளை இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்துவதற்கும் தயாரில்லை.

மேலும் கோட்டாபய  அரசாங்கம், சீனாவோடு நெருங்கி சென்று கொண்டிருக்கிற நிலையில்,  சிறீலங்கா மீது இந்த சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து கொண்டு வருகின்றது. அந்த அதிகரிக்கின்ற சர்வதேச அழுத்தங்களை அவர்கள் கையாளுவதற்காக இந்த விடுவிப்பை செய்திருக்கிறார்கள்.

அதுவும் அந்த 16 பேரில் 14 பேர் வரும்  ஆண்டு ஏப்ரல், மே அளவிலே விடுதலையாக இருந்தவர்கள். ஆகவே இந்த வகையில் பார்க்கின்ற போது பூகோள அரசியல் பூர்த்தியாகவும், இலங்கை இப்பொழுது ஆட்சியில் இருக்கின்றவர்கள் சீனா சார்ந்து செல்கின்ற போக்கும் இவர்கள் மீது ஏற்படுத்தி இருக்கின்ற நெருக்கடியானது, இவர்களுடைய விடுதலையை சாத்தியமாக்கி இருக்கின்றது.

உண்மையிலே இந்த கைதிகள் அல்லது தமிழ் மக்களுடைய அதிர்ஷ்டம் என்னவென்றால், இந்த ஆட்சியாளர்கள், சீனா சார்ந்தவர்களாக இருக்கின்ற காரணத்தினாலேயே இதுவரைக்கும் தமிழ் மக்களுடைய தலைமை என்று கூறி கொண்டு இருந்தவர்கள் கடந்த ஆட்சிக்கு முண்டு கொடுத்தது போன்று இந்த ஆட்சிக்கு முண்டு கொடுக்க முடியவில்லை. ஏனென்றால் இந்த ஆட்சி முழுக்க முழுக்க இந்தியாவினுடைய நலங்களுக்கு மாறாக சீனாவோடு சென்று கொண்டிருக்கின்ற காரணத்தினாலே எல்லோரும் சேர்ந்து இந்த அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்ற சூழல் என்பது, இந்த கைதிகளுடைய விடுதலையை, சாத்தியமாக்கி இருக்கின்றது.

ஆகவே, நாங்கள் இந்த பூகோள போட்டியை சரியாக பயன்படுத்தி தமிழ் தலைமைகள் நேர்மையாக இந்த மக்களுடைய, நலன்களின் அடிப்படையிலே செயற்பட்டால், அனைவருடைய விடுதலையும் சாத்தியமாக்க முடியும். உண்மையிலேயே கடந்த பத்து ஆண்டுகளுக்குள், இவர்கள் அனைவரையும் விடுதலை செய்திருக்க முடியும். தமிழ் தலைமைகள், இந்த மக்களுடைய நலன்களின் அடிப்படையில் செயற்பட்டிருந்தால், அது சாத்தியமாகி இருக்க முடியும்.

மேலும் இந்த அரசியல் கைதிகளுடைய விடுதலைகள் சாத்தியமாக வேண்டுமாக இருந்தால் தமிழ் தரப்பு இந்த வல்லாதிக்க அரசியலிலே எடுபிடிகளாக இல்லாமல் தமிழ் மக்களுடைய நலன் அடிப்படையிலே முடிவு எடுத்து செயல்படுகின்ற நிலைமை ஒன்று ஏற்படுகின்ற போது நிச்சயமாக நாங்கள் இந்த அனைத்து கைதிகளுடைய விடுதலையை சாத்தியமாக்கி கொள்ள முடியும்.

அதே நேரத்தில் கோட்டாபய ராஜபக்ச அந்த நெருக்கடி சூழ்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டிய ஒரு தேவை ஏற்படுகின்ற போது தனக்குரியவரையும் விடுவித்திருக்கின்றார். அதாவது இன்னுமொரு சக நாடாளுமன்ற உறுப்பினரை தமது கட்சிக்கார ஒருவரை படுகொலை செய்த துமிந்த சில்வாவையும் விடுதலை செய்திருக்கின்றார். இலங்கையினுடைய அனைத்து நீதிமன்றங்களும் அவருடைய குற்றத்தை உறுதிப்படுத்தி தண்டனை வழங்கி இருந்த நிலையில் அவரை விடுவித்திருப்பது,  தாம் நினைப்பது தான் இங்கே அனைத்தும் என்பதை கோட்டாபய மீண்டும் ஒரு முறை  வெளிப்படுத்தி இருக்கின்றார்” என்றார்.