சென்னை பல்கலைக்கழக மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கமல்

இந்திய மத்திய அரசின் குடியுரிமை சட்டத் சீர்திருத்தத்திற்கு எதிராக 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வரும் சென்னை பல்கலைக்கழக மாணவர்களை மக்கள் நீதிமையத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் இன்று(18) சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி, சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை தடுத்து நிறுத்தும் பொருட்டு, பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் வெளியேற வேண்டும் என்றும் நிர்வாகத்தினர் கோரியும், மாணவர்கள் அக்கோரிக்கையை செவிமடுக்காது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாயிற் கதவுகளைப் பூட்டி, இரவு முழுவதும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் போராட்டத்தை மேற்கொண்டனர். அப்போது பொலிசார் குவிக்கப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.

இன்று மாணவர்களை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவிக்க சென்ற நடிகர் கமலஹாசன் வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் நுழைவாயிலில் நின்றவாறே மாணவர்களை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும் போது, 800 மாணவர்கள் உணவு இன்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் உணவின்றி தவித்து வருவதாகவும், இதற்கு ஓர் ஒழுங்கு செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

அகதிகளை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வருவதாக கூறும் அரசு, மாணவர்களை படிக்கும் இடங்களில் அகதிகளாக்கியுள்ளது. இந்த நாடு சர்வாதிகாரத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றது என்றும் செய்தியாளர்களிடம் கமல் கூறினார்.

இப்போது தேர்தல் காலம் என்பதால், தங்களை பிரபல்யப்படுத்த, இந்த திருத்த சட்டத்தை ஒரு ஆயுதமாக அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றன என்பது மறுக்க முடியாத ஒன்று.