சங்ககால சோழர் நாணயத்தில் மனித உருவம்

சங்ககால சோழர் நாணயத்தில் முதல் முறையாக ஒரு மனித உருவம் தற்போது கண்டறியப்பட்டு உள்ளது என சர்வதேச செய்தி நிறுவனமான பிபிசி தமிழ் செய்தி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.மு. 4ஆம் நூற்றாண்டில் தொடங்கி, கி.பி.1867ஆம் ஆண்டு வரையில் தமிழகத்தை ஆண்ட பல்வேறு அரசர்களும் தங்கள் நாணயங்களை வெளியிட்டு உள்ளனர். இவற்றில் கி.மு. 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையிலான சங்க காலத்தில் தமிழகத்தில் புழங்கிய நாணயங்கள் ‘சங்க காலத் தமிழகக் காசுகள்’ என்று அழைக்கப்படுகின்றன.

சங்க காலக் காசுகளில் புலி சின்னம்

இந்த நாணயங்கள் பெரும்பாலும் செம்பினால் செய்யப்பட்டவை, சதுர வடிவானவை. அரிதாக வெள்ளி நாணயங்களும், வட்ட வடிவ நாணயங்களும் கிடைப்பது உண்டு. வட்ட வடிவ நாணயங்கள் கி.பி. 1-3ஆம் நூற்றாண்டில் வெளியான பிற்பகுதி சங்க கால நாணயங்களாக கருதப்படுகின்றன.

இந்த சங்க கால நாணயங்களில், சங்க கால சேரர்கள் வெளியிட்ட நாணயங்கள், சங்க காலப் பாண்டியர்கள் வெளியிட்ட நாணயங்கள், சங்க கால சோழர்கள் வெளியிட்ட நாணயங்கள், மலையமான் என்ற குறுநில மன்னர் வெளியிட்ட நாணயங்கள், அதிரன் எதிரான் சேந்தன் என்ற ஒரு குறிப்பிட்ட குறுநில மன்னன் வெளியிட்ட நாணயங்கள் என்று மொத்தம் 5 வகையான நாணயங்கள் கிடைத்துள்ளன.

சங்க காலக் காசுகளில் வில்

இந்த நாணயங்களில் எப்போதும் ஒரு பக்கத்தில் இவற்றை வெளியிட்ட அரசுகளின் ஆட்சிச் சின்னமே காணப்படும், அதாவது சோழர் காசுகளில் புலி, பாண்டியர் காசுகளில் மீன், சேரர் காசுகளில் வில் ஆகியவை காணப்படும். மறு பக்கத்தில்தான் பிற சின்னங்கள் காணப்படும்.

இப்படியாக சங்க காலக் காசுகளில், மறு பக்கத்தில் பொறிக்கப்படும் சின்னங்களில் பிரதானமாக உள்ள ஒரு சின்னம் யானை. இதுவரை கிடைத்த சங்க கால காசுகளில் மூவேந்தர்கள் அனைவருமே யானையையே அதிகம் பொறித்து உள்ளனர். இந்த யானைகள் தனியாகவோ குதிரை, மங்கலச் சின்னங்கள், காவல் மரம் போன்றவைகளுடன் சேர்ந்தோ காணப்படுகின்றன.

அத்தோடு, சில சங்க கால சேரர் காசுகளில் நிற்கும் மனித உருவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், ஏன் சோழர் காசுகளில் மட்டும் மனித உருவமே இல்லை? – என்ற கேள்வியும் விடை காணப்படாமல் இருந்தது. இந்தக் கேள்விகளுக்கான விடையாகவே சோழர் காசுகளில் நிற்கும் மனித உருவம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.