இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம் ஏனைய இன மக்களுக்கு ஒரு சட்டமா?

இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம், ஏனைய இன மக்களுக்கு ஒரு சட்டமா? என மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இங்குள்ள மக்களும் இந்த நாட்டு மக்கள்தான் அவர்கள் வேற்றுக்கிரகத்தில் இருந்துவந்தவர்கள் இல்லையெனவும் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு விஜயம் செய்தனர்.

இதன்போது மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்களை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது தாங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து  கருத்து தெரிவித்த கால்நடை பண்ணையாளர்கள்,

மூன்று தலைமுறையாக தாங்கள் இப்பகுதியில் கால்நடைகளை வளர்த்து வருகின்றோம். ஆனால் இன்று இப்பகுதியில் இருந்து வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களினால் வந்து விரட்டப்பட்டு வருகின்றோம்.

எங்களுக்கு இந்த கால்நடைகள் மூலமே வாழ்வாதாரம் கிடைக்கின்றது. கடந்த மூன்று மாதங்களாக வாழ்வாதாரம் இழந்த நிலையில் மிகுந்த கஸ்டங்களை எதிர்கொள்கின்றொம்.

IMG 8861 இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம் ஏனைய இன மக்களுக்கு ஒரு சட்டமா?

நாளாந்தம் இப்பகுதியில் இருந்து ஆறாயிரம் லீற்றர் பால் பெறப்படுவதுடன் இலங்கையின் பால் உற்பத்தியில் கனிசமான பால் இங்கிருந்து செல்லும் நிலையில் இதனை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழர்களின் வாழ்வாதாரத்தினை அழிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். தினமும் மாடுகள் களவாடப்பட்டு கொண்டுசெல்லப்படுவதுடன் மாடுகள் கொல்லப்படும் சம்பவங்களும் நடைபெறுகின்றது.

எமது நிலைமைகள் குறித்து அனைத்து தரப்பினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும் இதுவரையில் எந்தவிதமான சாதகமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.

அரசாங்கம் வேறு மாவட்டங்களில் இருந்து மக்களை கொண்டுவந்து மேய்ச்சல் தரைப்பகுதியில் இவ்வாறான அத்துமீறிய செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் அதேநேரம் எமது நிலைமைகள் குறித்து கவனத்தில் கொள்ளவதில்லை.

அரசாங்கத்தின் சார்பாக இங்குள்ள  நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரச்சினையை தீர்த்து தருவோம் என்று வாக்குறுதிகள் மட்டுமே வழங்குகின்றனர்.

இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் சரிசமமாக பார்க்கவேண்டிய அரசாங்கம் இங்கு சிங்கள மக்களுக்கு ஒரு நியாயத்தினையும் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயத்தினையும் வழங்குகின்றது.

ஒரு சிறிய பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த அத்துமீறிய பயிர்ச்செய்கை இன்று அப்பகுதியில் 10ஆயிரம் ஏக்கருக்கு மேல் தற்போது அபகரிக்கப்பட்டு மேய்ச்சல் தரை பகுதிகள் முழுமையாக அபகரிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் எமது தேவைக்கு ஒரு சிறிய கம்பினை வெட்டினால் ஓடிவந்து வழக்கு தாக்கல் செய்யும் வன இலாகா அதிகாரிகள், அப்பகுதியில் பாரிய காடழிப்பு செய்யப்படுவதை கண்டும் காணாமல் இருக்கின்றனர்.

அரச அதிகாரிகளும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்காத நிலையே இருக்கின்றது.

கடந்த காலங்களில் அரசாங்க அதிபர்களாக இருந்தவர்கள் தமது பிரச்சினைகள் குறித்து அதிகம் கவனம் செலுத்தியபோதிலும் தற்போதைய அரசாங்க அதிபரை  தொலைபேசியில் தொடர்புகொண்டு “நாங்க்ள மயிலத்தமடு, மாதவனை பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் கதைக்கின்றோம்” என்று கூறியதும் தொலைபேசி இணைப்பினை துண்டித்துவிட்டு தொலைபேசியை நிறுத்திவைக்கும் நிலையே உள்ளது” என கவலை வெளியிட்டுள்ளனர்.