மட்டு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் அராஜகமான வேலைகளில் ஈடுபடுகின்றார் -இரா.சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர், பிரதேச சபைகளுக்குள் அத்துமீறி நுழைவதும் கதவை உடைப்பதும் என அராஜகமான வேலைகளில் ஈடுபட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மோசமான நிலைமையை உருவாக்கி வருகின்றார் என்று குற்றம் சுமத்தியுள்ளார் இரா.சாணக்கியன்.

மேலும் 2009ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதியிலேயே இன்னும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவிக்கையில், “மயிலத்தமடு,மாதவனை பகுதகளில் இருக்கின்ற சூழலை பார்க்கின்றபோது மிகவும் வேதனையாக இருக்கின்றது. தொடர்ச்சியாக நாங்கள் மகாவலி அதிகாரசபை அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் நாங்கள் சொன்ன விடயம் என்னவென்றால் இவ்வாறான நிலைமை ஏற்படப்போகின்றது என்பதாகும். அதனை சரியான முறையில் செவிமடுக்காது அவர்கள் செய்த சில காரியங்களினால் மிக மோசமான நிலைமை இந்தப் பகுதிகளில் உருவாகியிருக்கின்றது.

இங்கு சோளப்பயிர்ச் செய்கையை மேற்கொண்டுள்ள சிங்கள விவசாயிகள் மாடுகளை தடுக்க முடியாத நிலையில் இருக்கின்ற அதேவேளை கால்நடை வளர்ப்பாளர்கள் சோளன் பயிர்செய்த சிங்கள விவசாயிகளிடமிருந்து தங்களது கால்நடைகளை பாதுகாப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த அரசாங்கத்தில் ஒரு ஒழுங்கான திட்டமிடல் இல்லாமல் இந்தப் பிரதேசங்களில் இனரீதியாக வாழும் மக்களின் எண்ணிக்கையை மாற்றுவதற்காக செய்கின்ற முயற்சியின் காரணத்தினால் இன்று மூவின மக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இந்தப் பிரதேசத்தில் மூவினத்தைச் சேர்ந்த பண்ணையாளர்களும் இருக்கின்றார்கள். இந்த அரசாங்கமானது மக்களின் கவனத்தை நாட்டிலிருக்கின்ற பொருளாதார ரீதியான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பி இவ்வாறான குடியேற்த் திட்டங்களை செய்வதற்கு முயற்சி எடுத்த காரணத்தினால் இன்று அனைவரும் மிகவும் கஷ்டமான சூழலுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இது தொடர்பில் நாங்கள் ஏற்கனவே சட்டநடவடிக்கை எடுத்திருக்கின்றோம். நாடாளுமன்றத்தில் இதுதொடர்பில் ஒத்திவைப்புப் பிரேரணையொன்றை முன்மொழிந்தபோது இராஜாங்க அமைச்சர்,மூன்று மாத காலத்திற்குள் அவர்களை அங்கிருந்து அகற்றுவதாக சொல்லியிருந்தார். இந்தப் பிரதேச மக்களுக்கும் இவ்விடயம் சொல்லப்பட்டதாக அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.

உண்மையில் மழையை நம்பி விவசாயம் செய்பவர்கள் மூன்றுமாத காலத்தின் பின்னர் சென்றுவிடுவார்கள். கால்நடை வளர்ப்பாளர்களும் அறுவடைக்குப் பின்னர் சித்தாண்டி போன்ற பிரதேசங்களுக்கு தங்களுடைய மாடுகளை கொண்டு சென்றுவிடுவார்கள். அடுத்தவருடம் பத்தாம் மாதமளவில் இந்தப் பிரச்சினை மீண்டும் ஆரம்பமாகும். அடுத்த வருடம் இப்பிரச்சினை மீண்டும் உருவாகுவதை நாங்கள் தவிர்க்க வேண்டும்.

இந்த அரசாங்கமானது தங்களுடைய இயலாமையை மறைப்பதற்காக செய்கின்ற சில நடவடிக்கைகள் தான் இவை. இங்கிருக்கின்ற பயிர்களை சாப்பிட வராமல் தங்களது கால்நடைகளை கட்டுப்படுத்துமாறு தமிழ் பண்ணையாளர்களிடம் கூறுமாறு இங்கு கடை வைத்திருக்கின்ற சிங்கள சகோதரி ஒருவர் கூறுகின்றார்.

அரசாங்கத்தின் அமைச்சர்களும் ஜனாதிபதியும் படித்தவர்களாக இருக்க வேண்டும். மேய்ச்சற்தரைக் காணிக்குள் சோளன் பயிர்ச்செய்கை மேற்கொண்டால் என்ன நடக்கும்? அதனை அறிந்தும் எங்களுடைய நிலங்களை அபகரிப்பு செய்வதால் என்ன நடக்கும். இந்த நாட்டில் மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி தங்களுடைய அரசை தக்கவைக்கின்ற ஒரு முயற்சியாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம்.

இது விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக மாவட்டத்தின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கு வந்திருக்கின்றோம். ஏனைய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் எங்கே என்று எங்களுக்குத் தெரியாது. அதிலே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வரவு செலவுத் திட்டத்திற்கே நாடாளுமன்றத்திற்கு வரவில்லை.

குழுநிலை விவாதத்தின்போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் சேர்ந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சென்று எங்களுடைய மாவட்டத்தின் பிரச்சினைகளை தொடர்ச்சியாக அங்கு கதைத்திருந்தோம். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் அந்தக் கூட்டங்களுக்கு வரவேயில்லை. அடுத்த வருடம் இந்த மாவட்டத்தில் எந்த அபிவித்தியும் நடக்காது. ஏனென்றால் மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் கூட்டத்திற்கு வரவேயில்லை. அவர் பிரதேச சபைகளுக்குள் அத்துமீறி நுழைவதும் கதவை உடைப்பதும் என அராஜகமான வேலைகளில் ஈடுபட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மோசமான நிலைமையை உருவாக்கிவருகின்றார். 2009ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதியில் அவர் இருக்கின்றார்” என்றார்.