அந்த 20 நாள் குழந்தை செய்த பாவம் என்ன? முஸ்லிம் மக்களை அதிரவைத்த கேள்வி – அகிலன்

கொரோனாவினால் மரணமடைந்த முஸ்லிம் தம்பதிகளின் 20 நாட்களேயான சிசு கடந்த திங்கட்கிழமை கொழும்பில் வலுக்கட்டாயமாகத் தகனம் செய்யப்பட்டிருக்கின்றது. முஸ்லிம்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் செய்தி இது. “இந்த அப்பாவி 20 நாள் குழந்தை தனது உடல் தகனம் செய்யப்படுமளவிற்கு செய்த பாவம் என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா.

இந்தக் கேள்விக்குப் பின்னால் உள்ள ஆற்றாமை, குழறல் இலங்கையில் நடைபெறும் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்குள் இருந்து மீளமுடியாமல் முஸ்லிம்கள் தத்தளித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றது.

“நான் மனமுடைந்துள்ளேன். வெறுப்புணர்வின் எல்லையைக் கடந்து விட்டேன்” என டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், “நாம் இன்னும் எவ்வளவு கொடுமையையும் காட்டுமிராண்டித்தனத்தையும் சகித்துக்கொள்ள வேண்டும்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் கோட்டாபய அரசாங்கம் செல்லும் பாதையையும், யார்த்த நிலைமையையும் இது வெளிப்படுத்துகின்றது.

கொரோனா வைரஸினால் உயிரிழக்கும் முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை (உடல்களை) அடக்கம் செய்வதா, தகனம் செய்வதா என்ற சர்ச்சை இலங்கை அரசியலில் உச்ச நிலையில் இருந்த போதுதான் அந்த 20 நாள் குழந்தை கொழும்பிலுள்ள லேடி றிச்வே வைத்தியசாலையில் கடந்த திங்கட்கிழமை மரணமடைந்தது.  மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மரணத்துக்குக் காரணம் கொரோனா எனத் தெரிவிக்கப்பட்டது.

அதனையடுத்து குழந்தையின் தந்தையிடம் சில ஆவணங்களில் கையொப்பமிடுமாறு மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தியது. ஆனால், தந்தை மறுத்துவிட்டார். தொடர்ந்தும் அவர்கள் வலியுறுத்தியதால், குழந்தையின் உடலை அங்கேயே விட்டுவிட்டு அவர் வெளியேறி விட்டார். பின்னர், குழந்தையின் உடல் கனத்தை மயானத்தில் தகனம் செய்யபடுவதாக தந்தைக்குத் தெரிவிக்கப்பட்டது. தந்தை உடனடியாக மயானத்துக்கு ஓடிச்சென்ற போதிலும், தனது குழந்தை தகனம் செய்யப்படுவதை அவர் பார்க்க விரும்பவில்லை. பார்க்கும் மன நிலையில் அவர் இருக்கவில்லை.

PicsArt 11 30 12.59.18 அந்த 20 நாள் குழந்தை செய்த பாவம் என்ன? முஸ்லிம் மக்களை அதிரவைத்த கேள்வி - அகிலன்

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியமைக்குப் பல காரணங்கள் உள்ளன. முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது அவர்களது வழமை. இஸ்லாத்தில் அவ்வாறுதான் கூறப்பட்டுள்ளது. பாவம் செய்பவர்களை மட்டுமே தகனம் (எரித்தல்) செய்தல் வேண்டும் எனச் சொல்லப்பட்டிருக்கின்றது. அதனால்தான்,  “அந்த 20 நாள் குழந்தை என்ன பாவம் செய்தது?” என்ற கேள்வியை அலிஸாஹிர் மௌலானா எழுப்பியிருந்தார்.

குழந்தையின் மரணத்தையடுத்து கொரோனா வைரஸினால் மரணமடையும் முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை அடக்கம் செய்வதா அல்லது தகனம் செய்வதா என்ற சர்ச்சை பாராளுமன்றத்தில் மீண்டும் எதிரொலித்துள்ளது. பிரச்சினை இலங்கையின் எல்லையைத் தாண்டி சர்வதேச அரங்கிலும் பேசுபொருளாகியிருக்கின்றது.

திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம், இவ்விடயத்தில் முஸ்லிம்களுடைய கரிசனையை வெளிப்படுத்தியதுடன், “அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது” என்று அரசாங்கம் நியமித்த தொழில் நுட்பக் குழுவின் பிடிவாதமான நிலைப்பாட்டையும் கேள்விக்குட்படுத்தினார். தொழில்நுட்பக் குழுவின் தீர்மானத்தின் பின்னணி குறித்த பல கேள்விகளை அவரது உரை எழுப்பியிருக்கின்றது.

இவ்விடயத்தில் மனித உரிமை அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை அரசாங்கம் புறக்கணித்து விட்டது. தகனம் செய்வதைத்தான் கட்டாயமாக்கியிருக்கின்றது. சிறுபான்மையினரின் மத நம்பிக்கைக்கு எதிரான இந்த ஒடுக்குமுறை இப்போது சர்வதேச கவனத்தையும் பெற்றுவிட்டது.

இலங்கையில் கொரோனா பரவத் தொடங்கிய காலத்திலிருந்தே இந்தப் பிரச்சினை சர்ச்சைக்குரிய ஒன்றாகத்தான் இருந்து வருகின்றது. இந்த விடயத்தில் தமக்கு இருக்கக்கூடிய பொறுப்பைத் தட்டிக்கழித்து விடுவதற்கான உபாயமாகத்தான் தொழில்நுட்பக் குழு ஒன்றை அரசாங்கம் அமைத்ததா என்ற கேள்வியும் எழுகின்றது.

இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. நீதிமன்றம் இதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்து விட்டது. உண்மையில், பிரச்சினை சட்டத்துறையுடன் சம்பந்தப்பட்டது அல்ல. இது அரசியல் ரீதியான ஒரு பிரச்சினை. இதனை அரசியல் ரீதியாகத்தான் அணுக வேண்டும்.

அரசாங்கம் இவ்விடயத்தில் நழுவல் போக்கிலேயே செயற்படுகின்றது. அதனை சவாலுக்கு உள்ளாக்கி அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடியளவுக்கு முஸ்லிம் தலைமைகளும் பலமானதாக இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிகழ்வுகள் முஸ்லிம்களை முற்றகவே வலுவிழக்கச் செய்து விட்டது.

“இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களினதும் மத உரிமைகளை உறுதி செய்வதற்கும், அவர்களுடைய பாரம்பரியங்களுக்கு மதிப்பளிப்பதற்கும் ஏதுவான வகையிலேயே அரசாங்கம் செயற்படும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்‌சவும் உறுதியளித்திருந்தாலும் கூட, நிலைமைகள் அவ்வாறில்லை.

ஆனால், “கொரோனா வைரஸினால் மரணிப்பவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கான தீர்மானம் சுகாதாரப் பிரினரின் வழிகாட்டல்களுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டது. இதில் அரசியல் தலையீடுகள் எதுவும் இல்லை” எனவும் மஹிந்த கூறியிருப்பது அரசாங்கத்தின் அணுகுமுறையில் மாற்றம் வரப்போவதில்லை என்பதைத்தான் உணர்த்துகின்றது.

கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியும் என உலக சுகாதார நிறுவனம் கூட கூறியிருக்கின்றது. இதன் அடிப்படையில் 180 இற்கும் அதிகமான நாடுகள் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான உரிமையைக் கொடுத்திருக்கின்றன. “மரணிப்பவர்களின் உடலில் இருக்கும் வைரஸ் ஒருபோதும் நீருடன் பரவப்போவதில்லை” என உலக சுகாதார அமைப்புடன் சம்பந்தப்பட்ட மருத்துவர்களே தெளிவாகக் கூறிவிட்டனர்.

ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் போது அதற்கான சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றினால் பாதிப்பு ஏற்படப்போவதில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

இதற்குப் பின்னரும் தொழில்நுட்பக் குழு எடுத்த தீர்மானமும், அத்தீர்மானத்தைத்தான் நடைமுறைப்படுத்தப் போவதாக அரசாங்கம் சொல்லிக்கொள்வதும், முஸ்லிம்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. “ஒரு இனத்தைப் பழிவாங்குவதற்கான செயற்பாடா இது?” என பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் கேள்வி எழுப்பியிருப்பது அனைத்து முஸ்லிம் மக்களினதும் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றது.

“ஒரு நாடு, ஒரு சட்டம்” என்பதைத் தமது பிரதான கோசமாக முன்வைத்திருக்கும் கோட்டாபய ராஜபக்‌ச அரசாங்கம், சிறுபான்மையினருடைய மத நம்பிக்கைகளுக்கு இடமளிக்கும் ஒரு நடைமுறையை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்க முடியாது. பௌத்த மதக்கோட்பாடுகளின் அடிப்படையில்தான் அனைத்தும் நடைபெற வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. தற்போதைய அரசாங்கம் அந்த அடிப்படையில்தான் கட்டியமைக்கப்பட்டிருக்கின்றது.

இங்கு பௌத்த மதம் தவிர்ந்த அனைத்தும் மதங்களும் இரண்டாம் பட்சம்தான். அதுபோலத்தான் மத நம்பிக்கைகளும். மற்றொரு மதத்தினரின் நம்பிக்கைகளுக்கு இடமளிப்பது அதற்கான அங்கீகாரத்தைக் கொடுப்பதாக அமைந்துவிடும் என்ற அச்சம் பௌத்த மதத்தினரிடம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களை இலக்கு வைத்த செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் அமைக்கப்படும் குழுக்கள் கூட, அரசாங்கத்துக்குச் சங்கடத்தைக் கொடுக்கும் முடிவுகளை எடுக்கப்போவதில்லை. அரசாங்கத்தின் விருப்பங்களை நிறைவேற்றுவதுதான் அவற்றின் பணியாக இருக்கும். அந்தவகையில்தான் அரசாங்கம் நியமித்த தொழில்நுட்பக்குழு கூட, அரசு விரும்பக்கூடிய பதிலைத்தான் கொடுத்திருக்கின்றது.

அலி ஷப்ரி என்ற முஸ்லிம் ஒருவரையே நீதி அமைச்சராக நியமித்திருக்கும் நிலையில்தான் இந்த செயற்பாட்டை கோட்டாபய முன்னெடுக்கின்றார். தமிழ் மக்களின் குரல் வளையை நெரித்த பேரினவாதம் இப்போது முஸ்லிம் மக்களுடைய குரல் வளையை நெரிக்கத் தொடங்கியிருக்கின்றது.