கோவிட்-19 தாக்கத்திற்கு 16,500 பேர் பலி – இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை குறைகின்றது

உலக நாடுகளை முற்றாக முடங்க வைத்து வேகமாக பரவிவரும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் நோயினால் இதுவரையில் 16,500 பேர் பலியா-கியுள்ளதுடன், 379,000 பேர் தொற்றுநோய்க்கு உட்பட்டுள்ளனர்.

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 101,000 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்த நோயின் தாக்கம் ஐரோப்பாவிலேயே தற்போது அதிகரித்து வருவதால் இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் முற்றாக முடங்கும் நிலைக்கு வந்துள்ளன.

இந்த நோயை கட்டுப்படுத்துவதில் உலக நாடுகள் அதிக வேகம் காண்பிக்கவேண்டும் என நேற்று (23) உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது. எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக இந்த நோய் பரவுவதாகவும் அது எச்சரித்திருந்தது.

இதனிடையே, இத்தாலியில் இந்த நோயின் தாக்கம் தணிய ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை 793 பேர் மரணமடைந்த போதும், ஞாயிற்றுக்கிழமை 657 பேரும், நேற்று 602 பேருமே அங்கு மரணமடைந்துள்ளனர்.

இதுவரையில் அங்கு 6,077 பேர் மரணமடைந்துள்ளதுடன், 63,928 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.