குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பு மருந்து வழங்க அனுமதி

ஐரோப்பிய மருந்துகள் முகமை ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பு மருந்தை 12-15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்கலாம் என ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஐரோப்பிய மருந்துகள் முகமை என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகளை மதிப்பிட்டு கண்காணிக்கும் ஒரு முகமையாகும்.

12-15 வயது வரையிலான குழந்தைகளுக்கு முதல் மருந்து வழங்குவதற்கான அனுமதியைதான் ஐரோப்பிய மருந்துகள் முகமை தெரிவித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவும் கனடாவும் ஃபைசர் மருந்தை பதின்ம வயதினருக்கு செலுத்த ஒப்புதல் வழங்கியிருந்தது.

உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்தில் தடுப்பு மருந்து செலுத்தும் பணி வேகமாக நடைபெற வேண்டும் என்ற அறிவித்ததையடுத்து ஐரோப்பிய மருந்துகள் முகமையின் இந்த ஒப்புதல் வந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பா பிரிவு இயக்குநர் ஹன்ஸ் க்லஜ், 70 சதவீத மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்கவில்லை எனில் பெருந்தொற்று முடிவடையாது என தெரிவித்துள்ளார்.