ஈழத் தமிழர்களின் அரசியலில் கால் நூற்றாண்டுகால தந்தையின் தீர்க்கமான பங்கு – அகிலன்

26.04.2021 அன்று தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவு தினத்தை நினைவுகூரும் விதமாக  இக்கட்டுரை பிரசுரமாகின்றது.

தனிச் சிங்களச் சட்டம் 1956ஆம் ஆண்டு ஐூலை மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டங்களையும் ஆரம்பிக்கப்போவதாக தமிழரசுக் கட்சி அறிவித்தது.

அதனை நீர்த்துப்போகச் செய்யும் ஒரு முயற்சியாக “இந்தப் பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் வாருங்கள்”  என தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வா என தமிழ் மக்களால் அன்பாக அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தை அழைத்தார்  அன்றைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க. தனிச் சிங்களச் சட்டத்தின் பிதாமகனும் அவர்தான்.

பிரதமரின் அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பு முடிவடைந்த பின்னர் தன்னுடைய காரில் ஏறுவதற்கு வந்த போது தந்தை செல்வா சொன்னவை முக்கியமானவை. அவர்களிடையே நடந்த பேச்சை ‘டெயிலி நியூஸ்’ பத்திரிகை பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

“காரின் கதவடியில் வந்த பிரதமர் பண்டாரநாயக்கவின் கைகளைப்பிடித்து “பலமுறை நிதானமாக சிந்தனை செய்து தான் உங்களை சந்திக்க நான் ஒத்துக்கொண்டேன். இந்த இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீங்கள் ஏதேனும் ஒன்றினை செய்தே ஆகவேண்டும். இன்றைய சூழலில் நாங்கள் ஒன்றித்து இப்பிரச்சினையை தீர்க்காவிட்டால், நாம் இறந்த பின்பு நாட்டிற்கு இப்பிரச்சினை பெரும் பேராபத்தை உண்டாக்கும்” என்று செல்வநாயம் கூறினார்.”

இதுதான் பத்திரிகைச் செய்தி. தீர்க்கதரிசனமாக தந்தை செல்வா சொன்னதை பண்டாரநாயக்க அப்போது கணக்கில் எடுக்கவில்லை. அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கு சிங்கள – பௌத்த மக்களின் உணர்வுகளைத் தூண்ட வேண்டும் என சிந்தித்துச் செயற்பட்ட பண்டாரநாயக்க, தந்தை செல்வாவின் இந்தக் கருத்தை அலட்சியப்படுத்தினார்.

அன்றைய நாள் தந்தை செல்வா தெரிவித்திருந்தது இன்று நிஜத்தில் நடந்துகொண்டிருக்கின்றது. தந்தை செல்வாவின் தீர்க்கதரிசனமும், பேராபத்தை நாடு சந்திக்கும் என்ற அவரின் பயமும் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. இனியும் தொடரும் ஆபத்தும் இருக்கத்தான் செய்கின்றது.

இலங்கைக்கு சுதந்திரத்தைக் கொடுக்கின்றோம் என அதிகாரத்தை சிங்களத் தலைவர்களின் கைகளில் பிரித்தானியா ஒப்படைத்த உடனடியாகவே, தமிழர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக்கும் செயற்பாடுகளைத்தான் அரசாங்கம் முன்னெடுத்தது. டீ.எஸ்.சேனநாயக்க ஆரம்பித்துவைத்த இந்த செயற்பாட்டை 1956 இற்குப் பின்னர் பண்டாரநாயக்க மற்றொரு பரிமாணத்தில் வேகமாக முன்னெடுத்தார்.

அவரது எழுச்சிக்குக் காரணமாக இருந்த அவரது இனவாதக் கொள்கைகள்தான் மூன்று வருடங்களில் புத்த பிக்கு ஒருவரால் அவர் சுட்டுக்கொல்லப்படுவதற்கும் காரணமாக இருந்தது என்பது வேறு கதை!

தந்தையின் அரசியல்

சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் மலேசியாவின் ஈப்போ நகரில் 1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி பிறந்தவர். இலங்கை திரும்பி ஒரு சட்டத்தரணியாக தொழிலைத் தொடங்கிய அவர், தமிழ்த் தேசியத்தின்பால் கொண்டிருந்த பற்றின் காரணமாக ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிரமாகச் செயற்பட்டார்.

ஆனால், இலங்கைக்கு ‘சுதந்திரம்’ (?) கிடைத்த உடனடியாகவே மலையக மக்களின் குடியுரிமையைப் பறிப்பதற்கு டீ.எஸ்.செனநாயக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் கடும் சீற்றமடைந்தார். இவ்விடயத்தில் தமிழ்க் காங்கிரஸ் எடுத்த நிலைப்பாடும் அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. கைத்தொழில் அமைச்சராகப் பதவி வகித்த ஜி.ஜி.பொன்னம்பலம் இதனை ஆதரிப்பதற்கு எடுத்த நிலைப்பாட்டுடன் தந்தை செல்வா முரண்பட்டார். தனிவழியில் செல்வதற்கு முடிவெடுத்தார்.

1948ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18ஆம் திகதி சமஷ்டி கட்சி தமிழில் தமிழரசுக் கட்சி என்ற பெயரில் மலர்ந்தது. எனினும், அப்போது தமிழ் மக்கள் சமஷ்டி அரசியலமைப்பை ஆதரிக்கவில்லை. 1952ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இரு தொகுதிகளிலேயே கட்சி வெற்றி பெற்றது. கோப்பாய் தொகுதியில் அமரர் கு.வன்னியசிங்கம் வெற்றி பெற்றார். திருகோணமலையில் அமரர் இராஜவரோதயம் வெற்றி பெற்றார். தந்தை செல்வா கூட தோல்வியடைந்தார். ஆனால், அவர் சோர்ந்துவிடவில்லை.

1956 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் இலங்கை அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. தனிச்சிங்களம் என்ற வாக்குறுதியுடன் தேர்தலில் களமிறங்கிய பண்டாரநாயக்க ஆட்சியைக் கைப்பற்றினார். தமிழ்ப் பகுதிகளிலும் காட்சி மாறியது. தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சி 10 ஆசனங்களைப் பெற்ற நிலையில், தமிழ்க் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை மட்டுமே பெற்றது. இதன் மூலம் தமிழ் மக்களின் தலைமை தந்தையின் கைகளுக்கு வந்தது.

பதவிக்கு வந்த உடனடியாகவே தனிச்சிங்கள சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான சட்டமூலத்தை பண்டாரநாயக்க கொண்டுவந்தார். தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிராக தந்தை செல்வா தலைமையில்  தமிழரசுக் கட்சியினரும் தமிழ் மொழி உரிமையில் கரிசனை கொண்டவர்களும் காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.

பொலிஸார் முன்பாகவே சிங்கள இனவாதிகள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர்களை மிகக்கொடூரமாக தாக்கினர். சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாகக் காயமடைந்தனர். காலி முகத்திடலில் தமிழர்களின் இரத்தம் வழிந்தோடியது. வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த மற்றைய மாகாணங்களில் வாழ்ந்த தமிழர்கள் பலர் தாக்கப்பட்டனர். குறிப்பாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பிலிருந்து வந்த புகையிரதங்களில் தமிழ்ப் பிரயாணிகள் தாக்கப்பட்டனர். அவர்கள் இரத்தத்தில் உறைந்தார்கள்.

பண்டா – செல்வா ஒப்பந்தம்

தனிச்சிங்களச் சட்டம் 1956ஆம் ஆண்டு ஐூலை மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் தமிழரசுக் கட்சி சத்தியாக்கிரகப் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டங்களையும் ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தது. வடக்கு கிழக்கின் நிர்வாகம் முடக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்தது. அதன் பிரகாரம் இந்தப் பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் வாருங்கள் என்று தந்தையை அன்றைய பிரதமரான பண்டாரநாயக்க அழைத்தார்.

இந்தப் பேச்சுக்களின் மூலமாக உருவானதுதான் பண்டா – செல்வா ஒப்பந்தம். தமிழ்மக்களுக்கான சிறந்ததொரு தீர்வை இது முன்வைத்திருந்தது. பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம், 1957 ஜூலை 26, அன்று எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவுக்கும் செல்வநாயகத்துக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டது.

தனிச் சிங்களச் சட்டம், இந்தியத் தமிழ் தோட்டத் தொழிலாளர் குடியுரிமை பறிப்பு, தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்களினால் ஆத்திரமடைந்து பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்ட தமிழர்களை ஓரளவுக்கு சமாதானப்படுத்தும் நோக்குடன் இந்த ஒப்பந்தம் பண்டாரநாயக்கவால் கைச்சாத்திடப்பட்டது எனச் சொல்லலாம்.

இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இலங்கை வாழ் தமிழ் மக்களின் தாயகம் என்பது அங்கீகரிக்கப்பட்டதுடன், வடக்கு மாகாணம் ஒரு பிராந்தியமாகவும், கிழக்கு மாகாணத்தில் நாட்டின் இன்னொரு சிறுபான்மை இனமாகிய முஸ்லிம் மக்களையும் அவர்களின் தனித்துவத்தையும் மதிக்கும் நோக்கிலும் கிழக்கு மாகாணம் இரண்டு அல்லது அதற்கு மேலான பிரதேசங்களாக வகுக்கப்பட்டது. இதன் பலனாக முஸ்லிம் மக்களும் தமிழர் தாயகத்தின் தனித்துவமான இனம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், அவர்களும் பிராந்தியத்திற்குரியவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்தியது அவ்வொப்பந்தம்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் பரவலாக்கப்பட்ட அதிகாரங்களாக விவசாயம், கூட்டுறவு, காணி, காணி அபிவிருத்தி, குடியேற்றம், சுகாதாரம், கைத்தொழில், கல்வி, மீன்பிடி, வீடமைப்பு சமூக சேவைகளும் வீடமைப்பும் என்பனவற்றோடு தமிழ் ஒரு தேசிய சிறுபான்மை மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழி சிங்கள மொழிக்கு குந்தகம் இல்லாமல் தமிழிலும் நடைபெறும் என திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டிருந்தது.

குடியேற்றத் திட்டங்களைப் பொறுத்தவரை, பிரதேச சபைகளுக்குத் தரப்படும் அதிகாரங்களுள், அப்பிரதேசத்துள் குடியேற்றப்படுபவரை தெரிவு செய்வதும், அங்கு வேலைக்கு ஆட்களை நியமிக்கும் பொறுப்பும் அடங்கும் என்பதில் இவ் ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டது.

பிக்குகள் முன்னணி ‘பண்டா-செல்வா’ ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தது. பண்டாரநாயக்க எழுச்சிபெறச் செய்த பேரினவாதம், பண்டாரநாயக்கவுக்கு எதிராகத் திரும்பத் தொடங்குவதை தமக்கு உகந்த சந்தர்ப்பமாக மாற்ற நினைத்தார் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. இவ்வொப்பந்தத்தை எதிர்த்து ஒக்டோபர் 4, 1957 இல் ஜெயவர்த்தன உட்பட பல சிங்களத் தலைவர்கள் பலரும் கண்டிக்கு நடத்திய எதிர்ப்பு யாத்திரை இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயவர்த்தன சந்தர்ப்பத்தை பயன்படுத்த முற்படுகின்றார் என்பதை உணர்ந்த பண்டாரநாயக்க ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார்.

தமிழ் மக்களின் எதிர்ப்புப் போராட்டங்களைச் சமாளிப்பதற்காக இவ்வாறு வாக்குறுதிகளைக் கொடுப்பதும் பின்னர் அவற்றைக் கைவிடுவதும் இன்றுவரையில் சிங்களத் தலைவர்களுக்கு வாடிக்கையாக இருக்கின்றது. இந்த நிலைமையை இனிமேலும் தொடரவிடக்கூடாது. தனியாகச் செல்வதுதான் தமிழர்களுக்குள்ள ஒரே வழி என்ற நிலையில்தான் 1976 இல் தமிழ்க் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து வட்டுக்கோட்டை பிரகடனத்தை தந்தை செல்வா வெளியிட்டார். அடுத்த வருடம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதற்கான அங்கீகாரத்தை தமிழ் மக்கள் பெருவாரியாக வழங்கினார்கள். ஆனால், தூரதிஷ்டவசமாக பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே தந்தை மரணமடைந்தார்.

சுமார் கால்நூற்றாண்டு காலமாக ஈழத் தமிழர்களின் அரசியலில் தீர்க்கமான ஒரு பாத்திரத்தை வகித்த தந்தை செல்வா, தீர்கதரிசனமாக பல விடயங்களைச் சொல்லிச் சென்றிருக்கின்றார். சிங்கள அரசியல் தலைவர்கள் எவ்வாறு செயற்படுவார்கள் – தமிழர் பிரச்சினையை அவர்கள் எவ்வாறு அணுகுவார்கள் என்பதை தெளிவாகப் புரிந்துகொண்டு அதனையிட்டு தீர்க்கதரிசனமாக அவர் சொன்ன கருத்துக்கள் முக்கியமானவை. இன்றும் கூட அவை எமக்கு வழிகாட்டக்கூடியவை!