புதிய அரசியலமைப்பு உருவாகுவதற்கான சாத்தியமில்லை – உறுதியாகக் கூறுகிறார் விஜயதாஸ

தற்போதைய அரசியல் சூழமைவுகளின் பிரகாரம் புதிய அரசமைப்பு உருவாவதற்கு சாத்தியமில்லை என்று ஆளும் தரப்பின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கமும் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 20 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவந்து நிறைவேற்றிக்கொண்டது. இதன்மூலம் ஜனாதிபதி இழந்த அதிகாரங்களை மீளப்பெற்றுக்கொண்டார்.

20 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் புதிய அரசமைப்பையும் ஓரிரு மாதங்களுக்குள்ளே நிறைவேற்றிவிட வேண்டும் என்று நான் ஆலோசனை வழங்கியிருந்தேன். ஆனால், ஆட்சியாளர்கள் அதில் அக்கறை காட்டியிருக்கவில்லை.

தற்போது ஆளும் தரப்பில் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டுள்ளன. துண்டுகளாக இயங்கும் நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் புதிய அரசமைப்பை உருவாக்க முடியும் என்று நான் நம்பவில்லை. வெறும் 44 உறுப்பினர்களைக் கொண்டு ஆளும் தரப்பு காணப்படும்போதே 19ஆவது திருத்தச்சட்டத்தை சமர்ப்பித்த நான் 215பேரின் ஆதரவைப் பெற்று அதனை நிறைவேற்றியிருந்தேன்.

தற்போதைய அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை கையில் வைத்துக் கொண்டும் புதிய அரசமைப்புக்கான பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முனைந்திருக்கவில்லை என்றார். அதேபோன்று மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப் படுமா? என்றுவினவியபோது, கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு உத்தேச சட்ட மூலம் பாராளுமன்றில் சமர்ப் பிக்கும் வரையில் அவ்விதமான ஒரு விடயம் நடைபெறுகின்றது என்று ஆளும் தரப்பு உறுப்பினர்களான எமக்குத் தெரியப்படுத்தப்படாதே இருந்தது. இவ்வாறு தான் ஆளும் கட்சிஉறுப்பினர்கள் நடத்தப்படுகின்றனர். ஆகவே, தேர்தல் முறைமை தொடர்பில் என்ன செய்யப்போகின்றார்கள் என்று கூறமுடியாதுள்ளது” என்றார்.