ஈரானுடனான முறுகலையடுத்து 1,000 அமெரிக்கப் படையினர்

ஈரானுடனான முறுகல் நிலையைத் தொடர்ந்து மத்திய கிழக்குப் பகுதிக்கு 1,000 படை வீரர்களை அனுப்பவுள்ளதாக அமெரிக்க இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். ஈரானின் போக்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்நடவடிக்கையை  மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

ஓமான் வளைகுடாவில் அண்மையில் நடந்த எண்ணெய் தாங்கி தாக்குதலுடன் ஈரான் தொடர்புள்ளதாக அமெரிக்கா தெரிவித்தமையை உறுதிப்படுத்துவதற்காக புதிய படங்களை அமெரிக்க கடற்படை வெளியிட்டுள்ளது. ஈரான் தனது அணுசக்தி பயன்பாடுகளை மட்டுப்படுத்துவதற்காக 2015இல் சர்வதேச நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதிக்கு இனி இணங்காது என்று அண்மையில் அறிவித்தது.

ஜுன் 27இற்குள் யுரேனியம் செறிëட்டப்பட்ட இருப்புகளின் பயன்பாட்டு அளவுக் கட்டுப்பாடு தொடர்பாக சர்வதேச நாடுகளுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை தான் மீறவுள்ளதாகவும் ஈரான் அறிவித்துள்ளது. இதன் பின்னரே அமெரிக்கா தனது படையை அதிகரிக்க முடிவு செய்தது.

இது ஈரானுடனான போருக்கான நடவடிக்கை அல்ல என்றும், தங்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கை என்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பாட்ரிக் ஷானஹான் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமக்குக் கிடைத்த உளவுத் தகவல்களை உறுதிப்படுத்துவது போன்றே ஈரானின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும், அதற்கான நடவடிக்கையாகவே இந்த படை குவிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பதற்றமான சூழ்நிலை குறித்த நகர்வுகளை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து, தேவைப்பட்டால் படைவீரர்களின் அளவில் மாற்றத்தை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் இந்த படை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எந்தப் பகுதியில் நிலைநிறுத்தப்படும் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.