“தமிழ் வாழ்க” என்று நாடாளுமன்றில் சொன்னால் போதுமா – இயக்குநர் தங்கபச்சன்

இந்திய நாடாளுமன்றில் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பதவியேற்றதுடன், தமிழ் வாழ்க என்று சிலர் கோஷமிட்டனர். இதனை பெருமையாக பேசி வருகின்றார்கள். ஆனால் 2014ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக பதவியேற்ற பொன் இராதாகிரஷ்ணன் தமிழில் பதவியேற்றுள்ளார் என்பது வரலாறு.

திரைப்பட இயக்குநர் தங்கபச்சன் தன்னுடைய முகநூலில் ஒரு பதிவை எழுதியுள்ளார். அதில், விமானங்களில் இந்தியாவிற்குள் பயணம் செய்யும் போதெல்லாம் நம் மொழி புறங்கணிக்கப்படுவதைக் கண்டு கொதித்திருக்கின்றேன். ஒரு குடிமகனுக்கு இருக்கும் உணர்வுகூட நாள்தோறும் விமானங்களில் பயணம் செய்யும் நம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இல்லாதது வியப்பாக இருக்கின்றது.

இந்நிலையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவில் தமிழில் பதவியேற்றுக் கொண்டதை நாம் பாராட்டுகின்றோம்.

இப்படியானவர்கள் புதுடில்லிக்குச் சென்ற விமானத்திலேயே தங்களுடைய எதிர்ப்புக் குரலை எழுப்பி தமிழில் அறிவிப்பை செய்திருக்க வேண்டும். இதுவரை செய்யாமல் போனாலும், இனியாவது அவர்கள் அப்படி தமிழ் மக்களுக்கான உரிமையை பெற்றுத் தரவேண்டும் என தங்கபச்சன் தனது முகநூலில் எழுதியுள்ளார்.