ஈராக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவுள்ள திருத்தந்தை

ஈராக் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ்,   அங்கு திறந்தவெளி பிரார்த்தனை கூட்டத்தில்  பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இந்த பிராத்தனையில் 10 ஆயிரம் பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஈராக்கில் அரசுப் படைகளுக்கும் ஐ.எஸ். படைகளுக்கும் இடையே பல ஆண்டுகள் கடுமையான போர் நடந்தது.

கடந்த 2017ல் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிடம் இருந்து அனைத்து நிலப் பகுதிகளையும் மீட்டதாக ஈராக் அறிவித்தது. ஆனால் பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான திருத்தந்தை பிரான்சிஸ் ஈராக்குக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சியாக அவரது இந்தப் பயணம் அமைந்துள்ளது.

அதே நேரத்தில் ஈராக்கின் ஷியா முஸ்லிம் பிரிவின் பெருந்தலைவரான அயதுல்லா அலி அல்சிஸ்தானியை அவர் சந்தித்து உரையாடியுள்ளார்.

இந்நிலையில், தனது பயணத்தின் இறுதி நாளில் போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட வடக்கு பகுதிகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் செல்லவுள்ளதாகவும் போரால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதோடு, இர்பிலில் உள்ள மைதானத்தில் திறந்தவெளி பிரார்த்தனை கூட்டத்திலும் அவர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.