ஐ.நா தீர்மானம் – கண்காணிக்கப்படும் இணைக்குழு நாட்டு தூதுவர்கள்

சிறீலங்கா அரசினால் தானது நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாக சந்தேகம் தோன்றியுள்ளதாக சிறீலங்காவுக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மகினொன் தனது ருவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

எனது தனிப்பட்ட கலந்துரையாடல்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. நான் அந்த கலந்துரையாடல்களுக்கு ஊடகவியலாளர்களை அழைக்கவில்லை.
கொழும்பு 07 இல் உள்ள கனடா கவுஸ் எனப்படும் எனது வதிவிடத்திற்கு வந்த விருந்தினர்களுடன் இடம்பெற்ற உரையாடல்கள் இரண்டு ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

சிறீலங்காவுக்கான பங்களாதேஸ் தூதுவர் ரறக் அரிபுல் மற்றும் கனேடியத் தூதுவர் ஆகியவர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களே ஊடகங்களில் வெளிவந்துள்ளன என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பிரித்தானியா தூதுவருக்கும், தென்கொரியத் தூதுவருக்கும் இடையிலான இரகசிய சந்திப்பும் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

தென்கொரியா மற்றும் பங்களதேஸ் ஆகிய நாடுகள் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் உள்ள அங்கத்துவ நாடுகள். எதிர்வரும் வாரம் சிறீலங்கா தொடர்பான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நிகழ உள்ள நிலையில் சிறீலங்கா அரசு இணைக் குழு நாடுகளின் தூதுவர்களின் சந்திப்புக்களை கண்காணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.