இஸ்லாமிய அரசு அமைப்பின் தலைவர் பாக்தாதியை கொன்றது எப்படி – அமெரிக்கா

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியை அமெரிக்க படைகள் கொன்றது எப்படி என்று அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் விவரித்துள்ளார்.

துருக்கி எல்லைக்கு அருகிலுள்ள பரிஷா எனும் இந்த கிராமம், சிரியா-இராக் எல்லையில் பாக்தாதி பதுங்கி இருப்பதாக எண்ணப்பட்ட இடத்தில் இருந்து வெகுதொலைவில் உள்ளது.

சிரியாவின் இட்லிப் மாகாணத்தின் பல பகுதிகள் இஸ்லாமிய அரசு குழுவினருக்கு எதிராக விளங்கும் ஜிகாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தன. ஆனால், இஸ்லாமிய அரசு அமைப்பின் உறுப்பினர்களை போட்டி குழுக்கள் அங்கு குடியமர்த்தி வருவதாக சந்தேகம் எழுந்தது.

சில வாரங்களாக கடுமையாக கண்காணிக்கப்பட்டு வந்த அபுபக்கர் அல்-பாக்தாதி, பதுங்கியிருக்கும் இடங்களை தொடர்ந்து மாற்றி கொண்டிருந்ததால், திட்டமிட்டிருந்த சில தேடுதல் வேட்டைகள் ரத்து செய்யப்பட்டன என்று டிரம்ப் கூறினார்.

இட்லிப்-க்கு திரும்பி சென்று இஸ்லாமிய அரசு அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பும் ஐ.எஸ் தலைவரின் திட்டத்தை விளக்கியபோது அதிபர் டிரம்ப் இவ்வாறு தெரிவித்தார்.

அல்-பாக்தாதி இருந்த வளாகத்தை எட்டு ஹெலிகாப்டர் கொண்டு தாக்கிய படைப்பிரிவுகள், கடுமையான பதில் தாக்குதல்களையும் எதிர்கொண்டதாக டிரம்ப் கூறினார்.109424110 gettyimages 451738080 இஸ்லாமிய அரசு அமைப்பின் தலைவர் பாக்தாதியை கொன்றது எப்படி - அமெரிக்கா

அத்துமீறி உள்ளே நுழைபவர்களை கொல்ல வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கருதப்படும்பிரதான வாயில் வழியாக செல்லாமல், சுவரில் தாக்குதல் நடத்தி துளையிட்டு கமாண்டோ படையினர் கட்டடத்திற்குள் நுழைந்தனர்.

தான் அணிந்திருந்த தற்கொலை குண்டுகளை வெடிக்கச்செய்து, தன்னையும் தனது மூன்று குழந்தைகளையும் பாக்தாதி கொன்றார் என்று டிரம்ப் தெரிவித்தார்.

அல்-பாக்தாதி தரித்திருந்த குண்டுகளை வெடிக்க செய்து தற்கொலை தாக்குதல் நடத்தியவுடன், அந்த நிலத்தடி கட்டடம் அவர் மீது இடிந்து விழுந்தது. இந்த நடவடிக்கையில் அமெரிக்க ராணுவப் பிரிவை சேர்ந்த நாய் ஒன்று காயமடைந்தது என்றார் டிரம்ப்.

“பாக்தாதி நோய்வாய்ப்பட்டவர். மோசமான மனிதர், இப்போது அவர் இறந்துவிட்டார்” என்று தெரிவித்த டிரம்ப், “அவர் ஒரு நாயைப்போல, ஒரு கோழையை போல இறந்துள்ளார்” என்றார்.

அமெரிக்க படையினர் யாரும் கொல்லப்படவில்லை. பாக்தாதியின் ஆட்கள் பலரும் கொல்லப்பட்டனர். பிறர் பிடிபட்டனர் என்று அவர் தெரிவித்தார். அந்த இடத்தில் இரண்டு மணிநேரம் செலவிட்ட அமெரிக்க சிறப்பு படைப்பிரிவினர், “மிகவும் உணர்திறன் வாய்ந்த பொருளை” கண்டெடுத்துள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

இந்த மாதத்தில் வடக்கு சிரியாவில் இருந்து அதிபர் டிரம்ப் அமெரிக்க படைகளை விலக்கியது வரை, அமெரிக்காவின் முக்கிய கூட்டணி படைகளில் ஒன்றாக இருந்த சிரியா குர்து இன படைப்பிரிவுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டு நடவடிக்கையை நடத்தியதாக தெரிவித்தன.

இந்த நடவடிக்கைக்கு முக்கிய ஆதரவு வழங்கியதற்காக குர்து ஆயுதப்படையை புகழ்ந்த டிரம்ப், ரஷ்யா, இராக், துருக்கி மற்றும் சிரியாவையும் புகழ்ந்தார்.

தாக்குதல் நடக்கும் பகுதியில் போர் நடவடிக்கையை நிறுத்தி வைத்திருந்த ரஷ்யா, அமெரிக்காவின் இந்த ராணுவ நடவடிக்கைக்காக தனது கட்டுப்பாட்டில் இருந்த வான்வழியை திறந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் அதிகம் தேடப்படும் நபர் அபுபக்கர் அல்-பாக்தாதி. தலைக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர் விலை அறிவிக்கப்பட்ட பாக்தாதி எங்கே இருக்கிறார் என்பது பெரும் மர்மமாகவே இருந்து வந்தது.

1971இல் இராக்கில் உள்ள சமர்ரா எனும் நகரில் பிறந்த பாக்தாதியின் இயற்பெயர் இப்ராஹிம் அவ்வாத் இப்ராஹிம் அல்-பத்ரி.

அவரது ஆதரவாளர்கள் வெளியிட்ட வாழ்க்கை குறிப்பின்படி 1990களில் பாக்தாத் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில், இஸ்லாம் மதம் பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

அமெரிக்காவால், 2003இல் சதாம் உசேன் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். அதன்பின் பாக்தாதி நிறுவிய இசுலாமியவாத குழு அமெரிக்க மற்றும் அதன் கூட்டணிப் படையினர் மீது தாக்குதல் நடத்தியதாக 2004இல் இவர் கைது செய்யப்பட்டு புக்கா எனும் இடத்தில் உள்ள முகாமில் அடைக்கப்பட்டார்.

அந்த முகாமில் இருந்து வெளியே வந்தபின் 2006இல் இராக்கில் மறுநிர்மாணம் செய்யப்பட்ட அல்-கய்தா அமைப்புடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.

அப்போது முஜாஹிதீன் ஷுரா கவுன்சில் எனும் கூட்டமைப்பை இஸ்லாமியவாத அமைப்புகள் ஒன்று சேர்ந்து அமைத்தன.

அமெரிக்க வான் தாக்குதலில் அதன் தலைவர் ஜோர்டானைச் சேர்ந்த அபு முசாப் அல்-ஜர்காவி கொல்லப்பட்டபின் அதன் பெயர் இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் என்று மாற்றப்பட்டது.

2010இல் அதன் தலைவர் அபு உமர் அல்-பாக்தாதி அமெரிக்க வான் தாக்குதலில் கொல்லப்பட்டபின், தற்போது கொல்லப்பட்டுள்ள அபு பக்கர் அல்-பாக்தாதி மற்றும் அபு உமருக்கு அடுத்த நிலையில் இருந்த அபு ஆயுப் அல்-மசிரி ஆகியோர் ஐ.எஸ் அமைப்பின் தலைவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

நன்றி- பிபிசி