இனவழிப்பை நினைவுகூரும் மியான்மர் அகதிகள்

பர்மிய இனவழிப்பில் இருந்து தப்பித்து பங்களாதேஷுக்கு அடைக்கலம் புகுந்த பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள்
இன்று ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷின் காக்ஸ் பஜாரில் உள்ள குட்டுபலோங் முகாமில் அமைதியான பேரணி நடத்தினர்.

மியான்மரில் இருந்து அவர்கள் வெளியேறிய இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இப்பேரணி இடம்பெற்றது.

“ரோஹிங்கியா இனப்படுகொலை நினைவு நாள்” மற்றும் “எங்கள் குடியுரிமையை நிலைநிறுத்து “.போன்ற பதாதைகளை அவர்கள் தங்கியிருந்தனர்.

இப்பேரணியில் கிட்டத்தட்ட 200,000 ரோஹிங்கியாக்கள் பங்கேற்றதாக காவல்துறை அதிகாரி ஜாகிர் ஹசன் தெரிவித்தார்.

“மியான்மர் எங்கள் நாடு. நாங்கள் ரோஹிங்கியாக்கள்,நாங்கள் எங்கள் உரிமைகளை திரும்பப் பெற விரும்புகிறோம், குடியுரிமை வேண்டும், எங்கள் வீடுகளையும் நிலத்தையும் திரும்பப் பெற விரும்புகிறோம்” என்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான முஹிப் உல்லா தெரிவித்தார்.

“எனது இரு மகன்களின் கொலைக்கு நீதி தேடுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன். எனது கடைசி மூச்சு வரை நீதியைத் தேடுவேன்” என்று 50 வயதான தயாபா கதுன் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தபோது, ​​அவரது கன்னங்களில் கண்ணீர் உருண்டது.