“இனவழிப்பின் அரசியல்” ; ஈழத்தமிழர் உணரவேண்டிய உண்மைகள் -ந.மாலதி

பேராசியர் ஹேர்மன் மற்றும் பிற்றர்சன் எழுதிய ”இனவழிப்பின் அரசியல்” (Politics of Genocide) என்ற ஆங்கில நூல் 2010 இல் வெளிவந்தது. இதற்கு பேராசிரியர் நோம் சொம்ஸ்கி முன்னுரை எழுதியுள்ளார். நூலாசிரியர்கள் இந்நூலை எழுதி முடித்தபோது 2009 முள்ளிவாய்க்கால் சம்பவம் இடம்பெறவில்லை.இதனால் இதுபற்றி இந்நூலில் குறிப்பிடப்படவில்லை.

(பின்னர் 2012 இல் நூலாசிரியர்கள் , ”Reflections on the Politics of Genocide” என்ற ஒரு ஆக்கத்தை வெளியிட்டார்கள். இவர்கள் கணக்கிலெடுத்த இரண்டு சம்பவங்கள்தான் முள்ளிவாய்க்கால் இனவழிப்பும் லிபியாவில் கடாபி அரசு அழிக்கப்பட்டதும். இந்த இரண்டு கொடூரங்களையும் இந்த ஆக்கத்தில் நூலாசிரியர்கள் ஒப்பிடுகிறார்கள்.இதுபற்றி இவ்வாக்கத்தின் பிற்பகுதியில் குறிப்பிடப்படுகிறது.)

இருந்தாலும் ”இனவழிப்பின் அரசியல்” நூலில் அவர்கள் சொல்வது ஈழத்தமிழர் இனவழிப்புக்கும் அதற்கு பின்னர் நடந்தவற்றிற்கும் மிகவும் பொருந்தும். ஏனெனில் இந்த நூலில் இனவழிப்பு என்ற பதம் பல தசாப்தங்களாக எவ்வாறு கையாளப்பட்டு வருகிறது என்பதை பல ஆதரங்களை வைத்து இவர்கள் காட்டுகிறார்கள்.PB21292 “இனவழிப்பின் அரசியல்” ; ஈழத்தமிழர் உணரவேண்டிய உண்மைகள் -ந.மாலதி

இந்த நூலில் முக்கியமான அட்டவணை ஒன்று உள்ளது. அதன் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது. இந்த அட்டவணையின் முதலாவது நிரல் கொடூரங்கள் நடந்த சில இடங்களை குறிக்கிறது. இரண்டாவது நிரல் இங்கு ஏற்பட்ட உயிர்சேத எண்ணிக்கையின் கணிப்பீட்டை காட்டுகிறது. மூன்றாவது நிரல் மேற்குலக அச்சு ஊடகங்கள் இந்த கொடூரங்களை இனவழிப்பு என்று எத்தனை தடவைகள் குறிப்பிட்டுள்ளன என்பதை காட்டுகிறது. நான்காவது நிரல் எத்தனை உயிரிழப்புக்களுக்கு ஒரு தடவை இனவழிப்பு பதம் அச்சு ஊடகங்களால் கையாளப்பட்டிருக்கிறது என்பதை காட்டுகிறது.

இராக்கின் மேல் 2003ம் ஆண்டுக்கு முன்னர் போடப்பட்ட பொருளாதார தடையால் ஏற்பட்ட உயிரிழப்புக்களில், 10,000 உயிரிழப்புகளுக்கு ஒரு தடவையே இனவழிப்பு என்ற பதம் கையாளப்பட்டிருக்கிறது. பொஸ்னியா போரின்போது ஏற்பட்ட உயிரிழப்புக்களில், 80 உயிரிழப்புக்களுக்கு ஒரு தடவை இனவழிப்பு பதம் கையாளப்பட்டிருக்கிறது. கொசோவோ போரின்போது ஏற்பட்ட உயிரிழப்புக்களில், 2 உயிரிழப்புக்களுக்கு ஒருதடவை இனவழிப்பு பதம் கையாளப்பட்டிருக்கிறது. ருவன்டா கொலைகளின் போது ஏற்பட்ட உயிரிழப்புக்களில், 256 உயிரிழப்புக்களுக்கு ஒருதடவை இனவழிப்பு பதம் கையாளப்பட்டிருக்கிறது.

கொடுமைகள் நடந்த இடம் கொல்லப்பட்டோர் எண்ணிக்கையின் கணிப்பு அச்சு ஊடகம் இனவழிப்புஎன்ற சொல்லால் விபரித்த எண்ணிக்கை எத்தனை உயிரிழப்புக்கு ஒரு தரம் இனவழிப்பு என்று விபரித்தது
இராக்கின் மக்கள் மீதான தடைகள் 800,000 80 10,000 ஒரு தடவை
இராக்கிற்கு எதிரான பிரித்தானிய-ஐ-அமெரிக்க போர் 1,000,000 13 76,923 ஒரு தடவை
பொஸ்னியாவின் முஸ்லீம்கள் 33,000 13 69 ஒரு தடவை
கொசோவாவின் அல்பேனியர்கள் 4,000 323 12 ஒரு தடவை
ருவன்டா 800,000 3199 250 ஒரு தடவை
கொங்கோ குடியரசு 5,400,000 17 317,647 ஒரு தடவை
டாஃவூர் 300,000 1172 256 ஒரு தடலை

 

இதையே ஈழத்தமிழர் உயிரிழப்புக்களுக்கும் கணிப்பிடுவதாக இருந்தால்…. உயிரிழப்புக்கள் 70,000 இலிருந்து 140,000 வரையாக கணிப்பிடப்படுகிறது. ஆனால் மேற்கு ஊடகங்கள் இதை இனவழிப்பு என்று பத்து தடவைகள் கூட குறிப்பிட்டிருக்காது. ஆக மேலே குறிப்பிட்ட அட்டவணையில் உள்ள சிலவற்றை போல ஈழத்தமிழர் இனவழிப்பை மறைப்பதும் மிகவும் மோசமாகவே நடக்கிறது என்பது நிரூபிக்கப்படுகிறது.

ஈழத்தமிழர் இனவழிப்பையும் மேற்குலகம் இதை கையாளும் விதத்தையும் புரிந்து கொள்வதற்கு இந்நூலில் சொல்லப்பட்டவை மிகவும் முக்கியமானவை. இத்தரவுகளையும் ஈழத்தமிழர் இனவழிப்பையும் மனதில் வைத்து நூலாசிரியர்கள் சொல்லும் சில கருத்துக்களை நாம் இப்போது பார்க்கலாம்.

“கடந்த சில தசாப்தங்களாக ‘இனவழிப்பு’ என்ற பதத்தில் உள்ள அரசியல் சார்பு மாறாமலே தொடர்கிறது. 1973 எவ்வாறு அது கையாளப்பட்டதோ அவ்வாறே இப்போதும் கையாளப்படுகிறது. இந்த சார்பின் ஊடாக ஐ-அமெரிக்காவின் நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பதையே இலகுவாக அடையாளம் காண முடியும்.”

அதே போல நூலாசிரியர்கள் மேலும்,

ஊடகங்களும் இனழிப்பு பற்றி பேசும் புத்திசீவிகளும் இன்னும் சொல்லப்போனால் அரசசார்பற்ற நிறுவனங்களும் கூட இதே சார்பாகவே படுகொலைகளையும் இனவழிப்பையும் பார்க்கிறார்கள். ஐ-அமெரிக்காவின் பூகோள பலத்தை கணக்கிலெடுக்கும்போது ஐரோப்பிய ஒன்றியமும் ஐநாவும் கூட இதையே செய்கின்றன.”

இதிலிருந்து ஈழத்தமிழர் இனவழிப்பு விடயத்தில் யாரெல்லாம் ஐ-அமெரிக்காவின் நண்பர்கள் என்பது தெளிவாகிறதல்லவா?

இவர்களின் நூல் வெளிவந்து இரண்டு ஆண்டுகளில், உலகில் மேலும் இரண்டு மாபெரும் கொடூரங்கள் நடந்தேறின. இவற்றையும் கணக்கிலெடுக்க வேண்டும் என்ற நோக்கில் நூலாசிரியர்கள் 2012 இல், ”Reflections on the Politics of Genocide” என்ற ஒரு ஆக்கத்தை வெளியிட்டார்கள். இவர்கள் கணக்கிலெடுத்த இரண்டு சம்பவங்கள்தான் முள்ளிவாய்க்கால் இனவழிப்பும் லிபியாவில் கடாபி அரசு அழிக்கப்பட்டதும். இந்த இரண்டு கொடூரங்களையும் இந்த ஆக்கத்தில் நூலாசிரியர்கள் ஒப்பிடுகிறார்கள். இந்த ஆக்கத்திலிருந்து சில பகுதிகள்.

லிபியாவும் சிறிலங்காவும்

சிறிலங்கா அரசு நீண்ட காலமாக அது நடாத்திய கொடுமைகளுக்கான தண்டனைகள் எதுவும் அனுபவிக்காமல் திட்டமிடப்பட்ட வகையில் தப்பி வந்திருக்கிறது. முக்கியமாக 2008-2009 இல் அது நடாத்திய கொடூரங்களுக்கான எதுவித தண்டனைகளையும் அது அனுபவிக்கவில்லை. அதே நேரத்தில், ஐநா செயராளர் நாயகமும், ஐநா மனித உரிமை கமிசனரும் லிபியாவின் கடாபியை மிகதுரிதமாக கண்டித்தனர். லிபியாவில் வெளிநாட்டு நிதியுடன் நடாத்தப்பட்ட கிளர்ச்சியை அடக்குவதற்கு கடாபி அரசு எடுத்த நடவடிக்கைகளை சர்வதேச குற்றிவியல் நீதிமன்றம் துரிதமாக விசாரணை செய்து கடாபியையும் அவரது மகனையும் மைத்துனரையும் கைது செய்வதற்கு அசாதரண வேகத்தில் ஆணை பிறப்பித்தது.

நாங்கள் ஒப்பிட்டு பார்த்த இந்த இரண்டு நாட்டின் சம்பவங்களிலும், இது போன்ற இன்னும் பல சம்பவங்களிலும் குறிவைக்கப்பட்ட நாடுகளின் தலைவர்கள் மிக மோசமானவர்களாக சித்திரிக்கப்பட்டார்கள். அதே நேரத்தில் பங்காளி நாடுகளின் தலைவர்களின் கொடுமைகள் கவலைக்கிடமானவையாக சித்தரிக்கப்பட்டு அவர்கள் மென்மையாக கண்டிக்கப்பட்டார்கள் அல்லது அவர்களின் கொடுமைகள் உதாசீனப்படுத்தப்பட்டன அல்லது குறைவாக மதிப்பிடப்பட்டன அல்லது தவிர்க்க முடியாதவையாக சித்தரிக்கப்பட்டன.

இவ்வாறு நூலாசிரயர்கள் இந்த 2012ம் ஆண்டு ஆக்கத்தில் எழுதுகிறார்கள்.

ஈழத்தமிழர்கள்,செயற்பாட்டாளர்கள், தமிழ் அரசியல் தலைமைகள் இந்த சார்புத்தன்மையை புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை இன்னும் உணர்ந்து கொள்ளாமல், மேற்குலகையும், ஐநாவையும், மேற்குலகில் தங்கி இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களையும் மட்டுமே நம்பி இருப்பதுதான் கவலைக்கிடமானது.