இந்திய பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று  சென்னை வருகிறார். இன்று மதியமே கேரளாவின் கொச்சி புறப்படும் அவர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

தமிழகம் மற்றும் கேரளா என இரு மாநில சட்டசபைகளுக்கும் அடுத்து வரும் சில மாதங்களில் தேர்தல் நடக்கவிருக்கிறது. எனவே மோதியின் வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை மற்றும் கேரள வருகையை எதிர்க்கும் விதத்தில், GoBackModi மற்றும் PoMoneModi என இரண்டு ஹேஷ்டேக்குகள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இந்திய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

மேலும், இதற்கு போட்டியாக, மோடியின் வருகையை ஆதரிக்கும் தொனியில் TNWelcomesModi மற்றும் KeralaWelcomesModi என்கிற ஹேஷ்டேக்குகளும் டிரெண்டாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் சுமார் 10,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.