சிவராத்திரி அனுட்டிக்கப்படும் மாசி மாதத்தை ‘சைவத்தமிழ் மறுமலர்ச்சி’ மாதமாக கடைப்பிடிக்க வேண்டுகோள்

மகா சிவராத்திரி அனுட்டிக்கப்படும் மாசி மாதத்தை (13/02/2021-13/03/2021)  சைவத்தமிழ் மறுமலர்ச்சி மாதமாக கடைப்பிடிக்க சைவத்தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

சைவத்தமிழர்களினுடைய ஆதி பரம்பொருளான சிவபெருமானைக்குரிய தலைசிறந்த விரதமான மகா சிவராத்திரி மாசி மாதத்தில் அனுட்டிக்கப்படுகின்றது.

அந்தரீதியில் சைவத்தமிழ் மக்களிடையே ஆன்மீக கலாச்சார அறநெறி விழிப்புணர்வுகளை செயற்றிட்டங்களை முன்னெடுக்குமாறு அனைத்து ஆலயங்களிடமும் சைவத்தமிழ் அமைப்புக்களிடமும் சிவதொண்டர்களிடமும் சைவத்தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது.

இந்த காலப்பகுதியில் எமது சைவ சமய விழுமியங்களையும்  அறநெறிப் பண்புகளையும் தொன்மங்களையும் அடுத்த தலைமுறைக்கு ஊடுகடத்துவதற்கு முன்னெடுப்புக்களை மேற்கொள்ளும் வகையில் பின்வரும் செயற்திட்டங்களை முன்மொழிகின்றோம்.

1.கிராமங்களிலும் நகரங்களிலும் அறநெறிப் பாடசாலைகளை உருவாக்கலும் வலுப்படுத்தலும்

2 எமது மரபுரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தலும் அவற்றை பாதுகாப்பதற்கான பொறிமுறைகளில் பங்கு கொள்ளலும்

3. அறப்பணிச் செயற்றிட்ங்களை முன்னெடுத்தலுக்கு உந்துசக்தி அளித்தல்
வருமானத்தின் ஒரு பகுதியில் ஏழை மக்களிற்கு உதவுதல், பிடியரிசித் திட்டம், அறப்பணி உண்டியல்

4. சைவத் தமிழர்களின் இருப்பு நிலை பேறுகைக்கு உதவுதல்
அதிக பிள்ளைகள் பெற ஊக்குவித்தல், அத்தகைய நலிவுற்ற குடும்பங்களிற்கு உதவுதல், எல்லை விளிம்பு நிலை கிராமங்களின் கல்வி, சுகாதார வசதிகளை மேம்படுத்த அழுத்தம், உறுதுணை புரிதல்

5. சிவதொண்டர், சிவமங்கையர் அணிகளை பாடசாலை , கிராம மட்டங்களில் உருவாக்கல்

6. தானங்களை ஊக்குவித்தல்
இரத்த தானம், சிரமதானம் , வித்யா ( கல்வி அறக்கொடை) தானங்களை நடாத்துதலும் தொடர்ந்து செய்ய உந்து சக்தி அளித்தலும்

7 .சிவ சின்னங்களினை அணிவதற்கு ஊக்கப்படுத்தல், இளையோருக்கு சிவதீக்கை வழங்கல், சிவசின்னங்கள் அணிவதற்கு கட்டுப்பாடு விதித்துள்ன பாடசாலைகள் தொடர்பாக அவதானம் செலுத்துதல்

8. சைவக் கோவில் குருமார்களுக்கு / ஆதீனகர்த்தாக்களுக்கு  ஆலயத்தை சமூக மையமாக கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்கும் செயற்றிட்டத்தை ஆரம்பித்தல்

9. பன்னிரு திருமுறை / நாயன்மார் வாழ்வியல் பரப்புரைகளை முன்னெடுத்தல்
தேவார திருவாசகங்களை பண்ணுடன் ஓத குருமார்கள், இளைய தலைமுறையினருக்கு பயிற்சி அளித்தலும் திருமந்திரம், பெரிய புராணம் காட்டும் வாழ்வியல் முறைகளை எடுத்து விளக்கலும்

10. ஈழத்து சித்தர்கள், அருளாளர்கள் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

ஒட்டு மொத்தமாக நோக்கின் இந்த 10 பிரகடனங்களிற்கான வேலைத்திட்டங்களை எமது ஒவ்வொரு  பிரதேசத்திலும் ஆரம்பித்தல் ,வலுப்படுத்தல் ஊடாக
1500 ஆண்டுகளிற்கு முன்பு எவ்வாறு சைவ பக்தி இயக்கம் சகல தளங்களிலும் செயற்பட்டு வெற்றி பெற்றதோ அதேபோன்று இக்கட்டான இத்தருணத்திலும் சைவத்தமிழை மறுமலர்ச்சி காணச் செய்வோம். அன்பே சிவமாய் அமர்ந்த பரம்பொருளின் பெருந்துணை நம் அனைவருக்கும் கிட்டுவதாகுக