அமெரிக்காவில்  கிரீன் கார்டு மீதான தடையை நீக்கினார் ஜோ பைடன்

அமெரிக்காவில் குடியுரிமைக்கு மிகவும் அவசியமான கிரீன் கார்டு பெறுவதற்கு முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்திருந்த கட்டுப்பாடுகளை தற்போது  அதிபர் ஜேத பைடன் நீக்கியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் கிரீன் கார்டு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிபர் ஜோ பைடன் கூறுகையில், “முன்னாள் அதிபர் ட்ரம்ப் விதித்த தடையானது அமெரிக்காவின் நலனுக்கு பாதகமாகவே அமைந்துள்ளது. எனவே தடை நீக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவில் செயல்படும் நிறுவனங்கள் உலகம் முழுவதும் உள்ள திறமை மிக்க பணியாளர்களை பயன்படுத்திக் கொள்வதற்கு முந்தைய உத்தரவு தடையாக இருந்தது. அத்துடன் தனி நபர்களும் கிரீன் கார்டு கோரி விண்ணப்பிக்கவும் வழியேற்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

இந்நிலையில், அமெரிக்காவில் தற்போது கிரீன் கார்டு அனுமதி கோரி 4,73,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். டொனால்டு ட்ரம்ப் விதித்த தடை காரணமாக இவர்களில் 1,20,000 பேரது விசா முடிவடைந்து விட்டது. தற்போது ஹெச் 1-பி விசா அடிப்படையில் கிரீன் கார்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது பலருக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்க வழியேற்படுத்தியுள்ளது.