தமிழக ஆளுநர் மாற்றப்படுவாரா? தமிழக அரசியலில் பரபரப்பு

468 Views

தொடர்ந்து பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் தமிழக ஆளுநரை மாற்றம் செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீரென கடந்த புதன்கிழமை இந்தியத் தலைநகர் தில்லிக்கு பயணமானார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஜிதேந்திரா சிங், ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

தமிழக ஆளுநர் பல திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கத் தாமதம் செய்வதால், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல போராட்டங்களில் குதித்தன. அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதல் வழங்காமையால், தமிழக அரசு புதிய அரசாணையைப் பிறப்பித்தது. அதன் பின்னர் ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.

இதேபோன்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி தண்டனை அனுபவித்து வரும் 7தமிழர்களை விடுவிக்கக் கோரி 2018இல் தமிழக அரசு அனுமதிக் கடிதம் அனுப்பியிருந்தும், ஆளுநர் எந்தப் பதிலும் வழங்கவில்லை. இந்த விடயம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இதேபோன்று பல பிரச்சினைகளில் ஆளுநரின் செயற்பாட்டால் மத்திய அரசு அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனாலேயே ஆளுநர் தில்லி விஜயத்தை மேற்கொண்டு, 2 நாட்கள் தங்கி தலைவர்களை சந்தித்து பேசி வருவதாகக் கூறப்படுகின்றது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் சட்டசபைத் தேர்தல் வருவதால், மக்களிடம் கெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காக மத்திய அரசு தமிழக ஆளுநரை மாற்றம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply