பூர்வீகக் குடிமக்கள் சார்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைஉதாசீனம் செய்கிறது அமெரிக்கா

636 Views

மக்கேட் – ஓக்லஹோமா (McGirt vs Oklahoma) விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை மாதத்தில், மேற்கொண்ட மிக முக்கிய தீர்மானம், ஐக்கிய அமெரிக்காவில் வாழுகின்ற பூர்வீகக் குடிகளைச் சேர்ந்தவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இவ்விடயம் தொடர்பாக கீழ் நீதிமன்றம் ஏற்கனவே அளித்திருந்த தீர்ப்பை மேற்குறிப்பிட்ட தீர்மானம் தலைகீழாக மாற்றியது.

நீதிமன்றத்தின் பார்வையை வெளிப்படுத்திய ஆவணத்தின் முதற்பக்கத்தின் கடைசி இரண்டு வரிகள் அதனை இரத்தினச் சுருக்கமாக வெளிப்படுத்துகிறது. “கூட்டாட்சிக் குற்றவியற் சட்டத்தைப் பொறுத்தவரையில், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் வாக்களிக்கப்பட்ட நிலங்கள் (பூர்வீக) உண்மையில் இந்திய மக்களுக்கு உரித்தான பிரதேசங்களா என்ற கேள்வி இன்று எங்களிடம் முன்வைக்கப்படுகிறது. அமெரிக்க காங்கிரஸ் இதற்கு மாறாக எதுவும் தெரிவிக்காதபடியால் அரசு தமது வாக்கைக் காப்பாற்றும் என நம்புகிறோம்.”

முக்கிய குற்றச் சட்டத்தைப் பொறுத்தவரையில், ஓக்லஹோமா மாநிலத்தில், முஸ்கோகீ (Muscogee) மக்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரதேசம், பூர்வீகக்குடிகளுக்குரிய  நிலமாகவே இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த அமெரிக்கர்களைப் பொறுத்தவரையில், பூர்வீகக் குடிகளாகிய தம்மை அங்கீகரித்த ஒன்றாகவே ‘மக்கேட்’ தீர்ப்பை, அவர்கள் கருதினார்கள். ‘ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மதிக்கப்படவேண்டும்’ என்ற ஓர் பிரகடனமாக அத்தீர்மானம் பார்க்கப்பட்டது.

Brazil court decision sparks fears over Indigenous land | Latin America |  Al Jazeera

அமெரிக்காவுக்கும் பூர்வீகக் குடிகளுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட இந்த மக்கள் கூட்டங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்கள், அமெரிக்க அரசியலமைப்புச் சாசனம் வரையறுப்பது போன்று, நாட்டின் அதியுயர் சட்டம் என்பது மட்டுமன்றி பூர்வீகக் குடிமக்களின் இறைமைக்கு, அதாவது தம்மைத் தாமே ஆட்சி செய்வதற்கு பூர்வீகக் குடிகள் கொண்டிருக்கும் அதிகாரத்தை உறுதிப்படுத்தியதோடு, பூர்வீகக்குடிகள் தமது நிலங்களின் மேல் கொண்டிருக்கும் உரிமையையும் மீள வலியுறுத்தியிருக்கிறது. இவ்வாறான காரணங்களினால், பூர்வீகக் குடிகளுக்குச் சொந்தமான நிலங்களில், தமது மக்களுக்கான நீதிப்பரிபாலன நடைமுறைகளை மேற்கொள்ளும் அதிகாரம் அவர்களுக்கே உரியதாகும். நீதிப்பரிபாலனம் என்று சொல்லும் போது, வரிகளை அறவிடும் அதிகாரமும் ஏனைய ஒழுங்குகளை மேற்கொள்ளும் அதிகாரமும் பூர்வீகக் குடிகளுக்கே உரியதாகும்.

ஆனால் வரலாற்றைப் பார்க்கும் போது, நாங்கள் அதிகமாக மகிழ்ச்சியடைய முடியாது. அதிபர் டொனால்ட் ட்ரம்பினால் உச்ச நீதிமன்றத்தின் நீதியரசராக நியமிக்கப்பட்ட, நீல் கோர்சச் (Neil Gorsuch) வெளிப்படுத்திய கருத்து, அதிபர் ட்ரம்புக்கும் அமெரிக்க பூர்வீகக் குடிகளுக்கும் இடையே நிலவுகின்ற உறவைப் பிரதிபலிக்கவில்லை. அமெரிக்க பூர்வீகக் குடிகள் தொடர்பாக, அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் தொடர்ச்சியாக எதிரான நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வந்திருக்கிறது. கூட்டாட்சி அரசாங்கத்தின் கடந்தகால வரலாற்றை நாம் ஆராய்ந்து பார்க்கும் போது, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்ச்சியாக மீறப்படும் வரலாறே காணப்படுகின்றது. ஆகவே ‘மக்கேட் எதிர் ஓக்லஹோமா’ என்ற விடயத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு விரைவாகவே மீறப்படும் என நாம் எதிர்பார்த்தோம்.

நாம் எதிர்பார்த்தது போலவே, மூன்று மாதங்களுக்கு பின்னர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (Environmental Protection Agency – EPA) பூர்வீகக் குடிகளுக்குச் சொந்தமான பிரதேசங்களில், சுற்றுச்சூழல் சார்ந்த விடயங்களில் நீதிப்பரிபாலனத்தை மேற்கொள்ளும் அதிகாரத்தை ஓக்லஹோமா மாநிலத்துக்கு வழங்குவதை உறுதிப்படுத்துகின்ற ஓர் உத்தியோகபூர்வக் கடிதத்தை அந்த மாநிலத்துக்கு அனுப்பி வைத்தது. இந்நடவடிக்கையை நியாயப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம், பொதுச்சட்டம் 109-59ஐப் பயன்படுத்தியது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாக அதிகாரியிடம் வேண்டுகோள் விடுக்கப்படும் பட்சத்தில், சுற்றுச்சூழல் தொடர்புபட்ட விடயங்களில் பூர்வீகக் குடிகளுக்குச் சொந்தமான பிரதேசங்களில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகாரத்தை ஓக்லஹோமா மாநிலத்துக்குப் போக்குவரத்து மசோதா வழங்குகிறது.

மக்கேட் தீர்ப்பு அளிக்கப்பட்டு 13 நாட்கள் கடந்த நிலையில், புதைபடிவ எரிபொருள் (fossil fuel) ஆதரவாளராக விளங்குகின்ற, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஆளுநரான கெவின் ஸ்ரிற் (Kevin Stitt) இதைத் தான் செய்தார். அவரது வேண்டுகோளுக்கு அனுமதி அளித்ததன் மூலம் சுற்றுச்சூழல் விடயத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியிருக்கிறது. உண்மையில்              மக்கேட் – ஓக்லஹோமா தீர்ப்பு என்ற ஒன்று அளிக்கப்படவேயில்லை என்பது போலத்தான் இந்தச் சுற்றுச் சூழல் அமைப்பின் செயற்பாடு நடைபெற்றிருக்கிறது.

தாம் வழங்கிய அனுமதிக்கடிதத்தில், ஓக்லஹோமா மாநிலம் கேட்டிருந்த அனைத்துக் கோரிக்கைகளுக்கும் சுற்றுச்சூழல் அமைப்பு அனுமதி வழங்கியதோடு மட்டுமன்றி, மேலதிக சில அனுமதிகளையும் இணைத்திருந்தது. மூலவளங்களைப் பாதுகாத்து மீட்கும் சட்டம் (RCRA),  தூய்மையான காற்றுச்சட்டம் (CAA),  தூய நீர்ச்சட்டம் (SDWA), பாதுகாப்பான குடிநீர்ச்சட்டம் (SDWA)  பூச்சிகொல்லிகள், பங்கசுகொல்லி, கொறிக்கும் விலங்குகொல்லி போன்றவற்றுக்கான கூட்டாட்சிச்சட்டம் (FIFRA), நச்சுப் பதார்த்தங்களைக் கட்டுப்படுத்தும் சட்டம் (TSCA) போன்ற சட்டங்களைப் பூர்வீகக் குடிகளின் பிரதேசங்களில் அமுலாக்கம் செய்யும் அதிகாரத்தை ஓக்லஹோமா மாநிலத்துக்கு அந்த அமைப்பு வழங்கியிருந்தது.

போர்மல்டிஹைட் (formaldyhyde), பாதரசம், ஈயம், அஸ்பெஸ்ரஸ், நச்சுத்தன்மை வாய்ந்த காற்று மாசுபடுத்திகள், நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிகொல்லிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆபத்தான கழிவுகளை வீசவும், பெற்றோலியத்தை எடுக்கும் நோக்குடன் நிலக்கீழ்ப் பாறைகளை துளைத்து அதிவேகமாக அவற்றுக்குள் திரவங்களைச் செலுத்தும் செயற்பாட்டை மேற்பார்வை செய்யவும், பூர்வீகப் பிரதேசங்களிலுள்ள தரை மற்றும் தண்ணீரை மாசுபடுத்தக்கூடிய சிறுநீர், மலம் கழிக்கின்ற பெருநிறுவனங்களுக்குச் சொந்தமான கால்நடை வளர்ப்பு போன்றவற்றுக்கான அனுமதியை அதிபர் ட்ரம்பின் நிர்வாகம் ஓக்லஹோமா மாநிலத்துக்கு வழங்கியிருக்கிறது.

உண்மையில், பூர்வீக மக்களின் தாயகப் பிரதேசங்களின் எல்லைக்குட்பட்ட நிலங்களை முற்று முழுதாக நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாற்றி, மனிதர்கள் அறவே குடியிருக்க முடியாத, கழிவுகள் நிறைந்த, நச்சுத்தன்மை வாய்ந்த நிலங்களாக அவற்றை மாற்றுவதற்கான முழுமையான அனுமதியை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு ஓக்லஹோமா மாநிலத்துக்கு அளித்திருக்கிறது. ‘மக்கேட்’ தீர்ப்பே மாநிலத்தின் கோரிக்கைக்குத் தூண்டுகோலாயிருந்ததென்று ஆளுநர் ஸ்ரிற்றுக்கு எழுதிய கடிதத்தில், ட்ரம்ப் நிர்வாகத்தில் சுற்றுசு;சூழல் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாக அதிகாரியாக இருக்கின்ற அன்ட்ரூ வீலர் (Andrew Wheeler) தெரிவித்திருக்கிறார்.

பூர்வீகக் குடிகளின் நிலங்கள் மீது சுற்றுச்சூழல் தொடர்பான விடயங்களில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை ஓக்லஹோமா மாநிலத்துக்கு கையளிப்பதன் மூலம், மக்கேட் தீர்ப்பு வருவதற்கு முன்னர் ஓக்லஹோமா மாநிலம் கொண்டிருந்த புவியியல் அதிகாரத்தை மீண்டும் அடைவதற்கான உதவியை வழங்கி, மக்கேட் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படமுடியாத ஒரு சூழ்நிலையை வீலர் (Wheeler) ஏற்படுத்தியிருக்கிறார்.

ஓக்லஹோமா மாநிலத்தில் 39 தேசிய உரிமை கொண்ட பூர்வீக மக்கள் கூட்டங்கள் இருக்கின்றன. மாநிலத்தில் ‘பூர்வீக அமெரிக்கர்கள்’ என்று தம்மை அடையாளப்படுத்துகின்ற ஐந்து இலட்சம் மக்கள் கூட்டாட்சி அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட குடிகளுள் ஒன்றுடனாவது இணைந்திருப்பார்கள். முக்கேட் – ஓக்லஹோமா தீர்ப்பை வேண்டுமென்றே வலுவிழக்கச் செய்கின்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் செயற்பாடு, உண்மையில் பூர்வீகக் குடிகளின் இறைமையை முற்றாகக் குழிதோண்டிப் புதைக்கின்ற ஒரு நடவடிக்கையேயாகும். என்றுமே சீர்செய்துவிட முடியாத பாதிப்புகளை ஓக்லஹோமாவில வாழுகின்ற பூர்வீகக் குடிகளுக்கு இது ஏற்படுத்தப்போகின்றது. அவர்களது வாழ்க்கைத் தரத்தைக் குறைப்பதற்கும் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய வரிவருமானம், தூயநீர் போன்ற அவர்களது வளங்களைச் சூறையாடுவதற்கும் அப்பால் இனவழிப்புக்கு ஒப்பானவிதத்தில் அவர்களது உடல்நலத்துக்கும் பாதுகாப்புக்கும் பாரதூரமான அச்சுறுத்தலை இது ஏற்படுத்தியிருக்கிறது.

சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஓக்லஹோமாவின் பொங்கா பூர்வீகக்குடியின் உறுப்பினருமான கேசி காம்ப்-ஹொறினெக் (Casey Camp-Horinek)  வீலரின் கடிதம் தொடர்பாகப் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்:

‘500 வருடங்களுக்கு மேலாகத் தொடர்கின்ற அடக்குமுறைகள், பொய்கள், இனவழிப்பு, சூழலழிப்பு, மீறப்பட்ட வாக்குறுதிகள் என்பவற்றுக்குப் பின்னர் ஓக்லஹோமாவின் இனவாதி ஆளுநரான ஸ்ரிற் சார்பாகவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தீர்மானம் எடுக்கும் என்பதை நாம் உண்மையில் எதிர்பார்த்திருக்க வேண்டும். இருப்பினும் இது எங்களால் சீரணிக்க முடியாத ஒரு விடயமாகவே இருக்கிறது. ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், கடைசி மூச்சை இழுக்கின்ற புதைபடிவ எரிபொருள் தொழிலைப் பாதுகாப்பதற்காகவே எல்லாவிதமான சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் இவற்றால் பாதிக்கப்படுவது யார்? எல்லாம் பாதிக்கப்படுகிறது.

Native Indians 4 பூர்வீகக் குடிமக்கள் சார்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைஉதாசீனம் செய்கிறது அமெரிக்கா

எல்லாரும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் நன்மை அடைவது யார்? ட்ரம்பும் அவரது கூட்டாளிகளும், எண்ணெய், வாயு என்பவற்றால் அதிக வருவாயைப் பெறுகின்றவர்களும் காலநிலை மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுமான ஆளுநர் ஸ்ரிற், செனட்டர்களான இன்ஹொவ் (Inhofe) லாங்போட் (Langford) ஆகியோராவர். திரைமறைவில் மேற்கொள்ளப்பட்ட இத்தீர்மானத்தை எதிர்த்து நிச்சயமாக நாம் போராட வேண்டும். நீதிமன்றங்கள், பன்னாட்டு நீதிமன்றங்கள் போன்ற எல்லாத் தளங்களிலும் நாம் போராட வேண்டும். உண்மையில் எமது வாழ்க்கையே ஒரு ஆபத்தான நிலையை அடைந்திருக்கிறது.

இந்த நிகழ்வுகள் இன்னும் முற்றுப்பெறவில்லை. நீதிபரிபாலன ரீதியில் ‘மக்கேட்’ தீர்ப்பு ஏற்படு;த்தக்கூடிய தாக்கங்களை முற்றுமுழுதாக முறியடிப்பதற்கு, சட்டங்களை எப்படி சிறப்பாகக் கையாளலாம் என்பது பற்றிக் கலந்துரையாடுவதற்காக நீதித் திணைக்களத்தின் தலைவரான வில்லியம் பார் (William Barr)  ஓக்லஹோமா மாநிலத்துக்கு வருகை தந்திருந்தார். அங்கு வந்திருந்த நேரத்தில் மக்கேட் தீர்ப்பினால் நேரடியான நன்மையடைந்த முஸ்கோகீ பழங்குடி இனமக்களை இழிவுபடுத்தும் வகையில் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் கூட, உச்ச நீதிமன்றத்தின் முடிவை ஒரு அமெரிக்க அதிபர் நிர்வாகம் ஏற்றுக்கொள்ள மறுத்தது இது முதற்தடவை அல்ல. அதிபர் ட்ரம்ப்பின் அபிமானத்துக்குரிய முன்னாள் அதிபரான (1829 – 1837) அன்ட்ரூ ஜாக்சன் (Andrew Jackson), வோசெஸ்டர் – ஜோர்ஜியா என்ற மாநிலங்களுக்கிடையான விடயத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க மறுத்ததுடன், ஒப்பந்தச் சட்டத்தையும் மீறியிருந்தார். சட்டத்தை அவர் அவமதித்ததன் காரணமாக ஆயிரக்கணக்கான செரோக்கி (Cherokee) இனமக்கள் பசியாலும் நோய்களாலும் சொல்லொணாத் துன்பங்களுக்குள்ளாகி, ஓக்லஹோமாவுக்கு பலவந்தமாகக் கொண்டுவரப்பட்டு சீரற்ற காலநிலைகளால் பாதிக்கப்பட்டு இறந்தார்கள்.

சுற்றுச்சூழல் ஒழுங்கமைப்புகளைப் பேணிப் பாதுகாக்கக்கூடிய ஆற்றலைக் காலனீய அரசுகள் கொண்டிருப்பதில்லை என்பதைக் காலங்காலமாக நாங்கள் கண்டிருக்கிறோம். நிலம், காற்று, நீர் போன்றவற்றை பேராசையுடன், அவதானமில்லாது, தூரநோக்கில்லாது, அழிவை நோக்கிய விதத்தில் மேலாண்மை செய்யும் அவர்களது தன்மை, காலநிலை தொடர்பான ஒரு ஆபத்தான நிலைக்கு உலகத்தைத் இட்டுச் சென்றிருப்பதோடு, மனிதகுலம் உயிர் பிழைப்பதையே கேள்விக்குரியதாக மாற்றியிருக்கிறது. அனைவருக்கும் நன்மையைத் தரக்கூடிய விதத்தில் உயர்வான முறையில்  சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பூர்வீகக் குடிகள் கொண்டிருக்கின்ற ஆற்றலைக் கண்டு மேற்கத்தைய விஞ்ஞானிகளே வியந்திருக்கிறார்கள்.

Screenshot 56 பூர்வீகக் குடிமக்கள் சார்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைஉதாசீனம் செய்கிறது அமெரிக்கா

பூர்வீகக் குடிகள் சூழலைப் பாதுகாக்கும் முறைகளைப் பின்பற்றி நடக்கவும், தேவைப்பட்டால் நிலத்தை அவர்களிடமே கையளிப்பதையும் அவர்கள் ஊக்குவிக்கிறார்கள். இந்த முயற்சி தொடர்பாக ஓக்லஹோமாவின் பூர்வீகக் குடிகள் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கிறார்களா அல்லது சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு ஓக்லஹோமா மாநிலத்துக்கு சுற்றுச்சூழல் தொடர்பாக நடவடிக்கை அனுமதி கொடுக்கப்பட்ட பயன்பட்ட சட்டத்தை மீளப்பெறும்படி அமெரிக்க காங்கிரசைக் கோருவார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இது எவ்வாறாக இருப்பினும், இப்படிப்பட்ட நடவடிக்கைகள் பூர்வீக மக்கள் தேசியங்கள் அனைத்தையுமே அச்சத்துக்குள்ளாக்கக்கூடிய முன்னுதாரணங்களாகும். எமது பூர்வீக நிலங்களை அழித்தொழிப்பது உண்மையில் போர் தொடுப்பதற்குச் சமனான ஒரு விடயமாகும். நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுப்பொருட்களின் நடுவில் நச்சுத்தன்மை வாய்ந்த நீரைக் குடித்துக்கொண்டு, அசுத்தமான காற்றைச் சுவாசித்துக்கொண்டு எமது பிள்ளைகளால் எப்படி உயிர் வாழ முடியும்?

தமிழில் ஜெயந்திரன்

நன்றி: அல்ஜசீரா

Leave a Reply