வவுனியாவில் பெண் ஒருவர் கடத்தப்பட்டு விடுவிப்பு

GRFHY வவுனியாவில் பெண் ஒருவர் கடத்தப்பட்டு விடுவிப்பு

வவுனியாவில் வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்களால் பெண் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப் பட்டுள்ளதாக வவுனியா  காவல் துறையில்  முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது.

நேற்றைய தினம்  காலை வவுனியா, கோவில்குளம் பகுதியில் உள்ள அகிலாண்டேஸ்வரர் சிவன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு விட்டு வீடு நோக்கி  திரும்பிய முதிய பெண் ஒருவரை வெள்ளை வான் ஒன்றில் ஆலயம் முன்பாக வந்த நபர்கள் அழைத்துள்ளனர்.

இதன் போது, குறித்த பெண் வான் அருகில் சென்ற போது அவர்கள் குறித்த பெண்ணை வானில் இழுத்து ஏத்திக் கொண்டு சென்றுள்ளனர். குறித்த பெண்ணை சுமார் இரண்டு மணித்தியாலத்திற்கு மேலாக வானில் கொண்டு சென்ற குறித்த நபர்கள், மதியமளவில் பெண் அணிந்திருந்த 3 பவுண் காப்பினை கழற்றி விட்டு பெண்ணை மடுகந்தை பகுதியில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

அங்கிருந்து, தமக்கு நடந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண் உறவினர்களுக்கு தெரியப் படுத்தியதுடன், முச்சக்கர வண்டி ஒன்றில் வவுனியா காவல் நிலையம் சென்று,  தாம் கடத்தப்பட்டமை தொடர்பில் வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு காவல் துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில்  காவல் துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதே வேளை, கடத்தப்பட்ட போது குறித்த பெண் சங்கிலி, காப்பு, மோதிரம், தோடு உட்பட 9 பவுண் நகைகளை அணிந்திருந்த போதும் வானில் கடத்தியவர்கள் 3 பவுண் காப்பினை மட்டுமே கழற்றி விட்டு பெண்ணை இறக்கி விட்டு சென்றமை குறிப்பிடத் தக்கது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021