ஜே.வி.பி கார்த்திகை வீரர்களை நினைவுகூர முடியுமெனில், நாம் ஏன் மாவீரர்களை நினைவுகூர முடியாது? ரவிகரன்

நாம் ஏன் மாவீரர்களை நினைவுகூர முடியாது

ஜே.வி.பி கட்சியினர் யாழில் கடந்த 13ஆம் திகதியன்று கார்த்திகை வீரர்களின் ஞாபகார்த்தம் என்னும் பெயரில் நினைவேந்தல் நிகழ்வொன்றினை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு ஜே.வி.பி கட்சியினர் கார்த்திகை வீரர்களை நினைவேந்த முடியுமெனில், நாம் ஏன் மாவீரர்களை நினைவுகூர முடியாது என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை மாவீரர் நாளினைத் தடுப்பதற்காக நீதிமன்றிலே வழக்குத்தாக்கல் செய்யும் காவல்துறையினர், ஏன் கார்த்திகை வீரர்களின் நினைவேந்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்  கேள்வி எழுப்பியதுடன், காவல்துறையினரின் இந்த பாரபட்சமான செயற்பாட்டினை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிக்குள் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி, முல்லைத்தீவு  காவல்துறையினர் 17.11.2021அன்று மாங்குளம் நீதிமன்றில் AR/868/21 என்னும் வழக்கிலக்கத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

அதற்மைய வழக்கினை ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, முல்லைத்தீவு காவல் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பன்னிரெண்டு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இவ்வாறு நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட தடைக்கட்டளையினை 19.11.2021இன்று முல்லைத்தீவு காவல்துறையினர் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் இல்லத்திற்கு சென்று கையளித்திருந்தனர்.

குறித்த தடைக்கட்டளையினைப் பெற்றுக்கொண்ட பின்னர் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (19)  முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு காவல்துறையினரால் தடை உத்தரவு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை மதிக்கின்றோம்.

காவல்துறையினர் இந்த விடயத்தில் ஒரு பாரபட்சமாக நடக்கின்றார்கள் .மாவீரர் நாள் நிகழ்வினை தமிழ் மக்கள் அனுஸ்டிக்கக் கூடாது என்ற நிலையில் பல நீதிமன்றங்கள் ஊடாக தடை  உத்தரவினை பெற்று எல்லோருக்கும் வழங்கி வருகின்றார்கள்.

கடந்த 13 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணி கட்சியினர் யாழ்ப்பாணத்தில் கார்த்திகை வீரர்கள் தினம் என்று நினைவு கூர்ந்துள்ளார்கள். இதற்கு நாங்கள் எதிர்ப்பல்ல.

கார்த்திகை வீரர்கள் நினைவுதினம் என யாழில் வந்து நினைவுகூர முடியுமானால் எங்கள் மக்கள் ஏன் தங்கள் மாவீரர்களை நினைவு கூரமுடியாது என்பது தான் என்னுடைய கேள்வி? என்றார்.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad ஜே.வி.பி கார்த்திகை வீரர்களை நினைவுகூர முடியுமெனில், நாம் ஏன் மாவீரர்களை நினைவுகூர முடியாது? ரவிகரன்