இலங்கை-மண்ணெண்ணெய்க்காக வரிசையில் காத்திருந்து வீடு திரும்பியவர் உயிரிழப்பு

மண்ணெண்ணெய்க்காக வரிசையில் காத்திருந்தவர் உயிரிழப்பு

இலங்கையில் மண்ணெண்ணெய்க்காக வரிசையில் சுமார் 6 மணித்தியாலங்கள் காத்திருந்து வீடு திரும்பிய நபர் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இலங்கை,  ஹட்டன் – தும்புறுகிரிய வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தேவநாயகம் கிருஸ்ணசாமி (55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த வர்த்தகர் ஹட்டன் நகரில் வாடகை கட்டடமொன்றில் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (26) மாலை 5 மணியளவில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு சென்ற அவர், வரிசையில் நின்று மண்ணெண்ணெய்யைப் பெற்று இரவு 11 மணியளவில் வீடு திரும்பியதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இன்று அதிகாலை அவர் நித்திரையிலேயே உயிரிழந்துள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் தனது கணவருக்கு எவ்வித பாரதூரமான நோய்களும் இருக்கவில்லை என்று தெரிவித்துள்ள உயிரிழந்தவரின் மனைவி, மண்ணெண்ணெய் பெறுவதற்காக பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தமையாலேயே தனது கணவர் மரணித்தார் என்றும் குற்றச்சாட்டியுள்ளார்.

எனினும், மரணத்துக்கான காரணத்தை கண்டறிய சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Tamil News