இலங்கையின் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை

சுகாதாரக் கட்டமைப்பின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்யவும், அதனை மேலும் வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கவும் நாட்டிற்கு வருகை தந்திருந்த உலக சுகாதார ஸ்தாபணத்தின் சர்வதேச நிபுணர் குழுவினர், தமது பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

அதற்கமைய இந்த மீளாய்வு அறிக்கையின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் சுகாதாரச் சேவை வலையமைப்பை அதிக வினைத்திறனுள்ள மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட ஒரு கட்டமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி வைத்தியர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ் தலைமையிலான நிபுணர் குழுவினர், அண்மையில் சுகாதார அமைச்சில் வைத்து அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சரைச் சந்தித்து தமது மீளாய்வு முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். இதன்போது இலங்கையின் ஆரம்ப சுகாதாரப் பராமரிப்புச் சேவையின் தற்போதைய நிலை மற்றும் சவால்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

ஆரம்ப சுகாதார சேவை மறுசீரமைப்பு தொடர்பான இறுதி அறிக்கை இன்னும் சில தினங்களில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இலங்கை “அனைவருக்கும் சுகாதாரக் காப்பீடு” எனும் இலக்கை அடைவதற்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளைத் தொடர்ச்சியாக வழங்கப்போவதாக உலக சுகாதார ஸ்தாபனம் இதன்போது மீள உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 20ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த இக்குழுவில், தென்கிழக்கு ஆசிய பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் இபாதத் தில்லான், ஜப்பான், ஆஸ்திரேலியா, தாய்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச சுகாதார நிபுணர்கள் பலரும் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.