வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்க விசேட முன்மொழிவுகள் கையளிப்பு

வெளிநாடுகளில் வசிக்கும் 15 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்களுக்கு தேர்தல்களில் வாக்களிப்பதற்கான சட்ட ரீதியான மற்றும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பது குறித்து நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாரிய பங்களிப்பை வழங்கும் புலம்பெயர் இலங்கையர்களுக்கு, நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் வாய்ப்பை வழங்காதிருப்பது அநீதியானது. அறிக்கையின் பரிந்துரைகள் வெகுவிரைவில் சட்டமாக்கப்படும் என மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும்  பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

மேலதிக தேர்தல் ஆணையாளர்  எல்.ஏ.பி.கே. குமதுங்க தலைமையிலான இக்குழுவானது, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தி தமது பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

வெளிநாட்டுப் பணியாளர்கள், மாணவர்கள்,இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள்  மற்றும் ஏனைய தேவைகளுக்காக வெளிநாடு சென்றவர்கள் என்ற அடிப்படையில் வகைப்படுத்தி பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முன்மொழியப்பட்டுள்ள நான்கு பரிந்துரைகள்

வெளிநாடுகளில் உள்ள தகுதியுள்ள வாக்காளர்களை முறையாகப் பதிவு செய்வதற்கான புதிய பொறிமுறை, வெளிநாடுகளில் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் தேர்தல் செலவீனக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் தாக்கம் குறித்த வழிகாட்டல்கள், தூதரகங்கள் ஊடாக, தபால் மூலம் அல்லது பாதுகாப்பான இணையவழி முறைகளைப் பயன்படுத்தி வாக்களிப்பதற்கான சாத்தியக்கூறுகள். மற்றும்   வெளிநாடுகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுதல் மற்றும் முடிவுகளை அறிவிப்பதற்கான நடைமுறைகள் என்ற அடிப்படையின் நான்கு பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

1990 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இது குறித்து விவாதிக்கப்பட்டு வந்த போதிலும், முறையான ஆய்வு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 2025 டிசம்பரில் நியமிக்கப்பட்ட இக்குழுவானது, அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் என 16 வெவ்வேறு தரப்பினரின் கருத்துக்களை உள்வாங்கி, மூன்று மாத காலத்திற்குள் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.

மேலதிக பரிந்துரைகள்

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு அப்பால், உள்நாட்டில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், சுங்க அதிகாரிகள், மீனவர்கள் மற்றும் சிறைக்கைதிகள், நோயுற்ற நிலையில் உள்ளவர்களுக்காக முன்கூட்டிய வாக்களிப்பு அல்லது நடமாடும் வாக்களிப்பு  முறைகளை அறிமுகப்படுத்துவது குறித்தும்  அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குழுவின்  அறிக்கையை  பெற்றுக்கொண்ட  மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள், பொதுநிர்வாக அமைச்சர்  சந்தன அபேரத்ன,  நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாரிய பங்களிப்பை வழங்கும் புலம்பெயர் இலங்கையர்களுக்கு, நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் வாய்ப்பை வழங்காதிருப்பது அநீதியானது.

இந்த அறிக்கையை அமைச்சரவைக்கு   சமர்ப்பித்த பின்னர், பொதுமக்களின் கலந்துரையாடலுக்காக  வெளியிடவும், அதன் பின்னர் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் அரசாங்கம் தயாராக உள்ளதாக குறிப்பிட்டார்.