மற்றைய தமிழ்க் கட்சித் தலைவர்களுடனும் பேசுவோம்

மற்றைய தமிழ்க் கட்சித் தலைவர்களுடனும் பேசுவோம்;ஒற்றுமை முயற்சி குறித்து செல்வம்
Selvam MP மற்றைய தமிழ்க் கட்சித் தலைவர்களுடனும் பேசுவோம்தமிழினத்தை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று ஆண்டவர் மேல் பழியைப் போட்டுவிட்டு நாங்கள் தப்பிவிட முடியாது. ஒவ்வொரு அங்குலமாக எங்களுடைய நிலங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், எங்களுடைய இனத்துக்காக எந்த விலையையும் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தும் கட்சித் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் ரெலோவின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற் கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எமது இனத்தை அழிக்க நினைக்கின்ற அரசுக்கு எதிராக ஒரு பலமான சக்தியாக அமைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே தேசியத்தை நேசிக்கின்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். இரண்டாவது முறையில் நாங்கள் விடுபட்ட தரப்புகளுக்கும் அழைப்பிதழ் கொடுத்திருந்தோம்.

யாழ்ப்பாணத்தில் எங்களுடைய காரியாலயத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அதில் சுரேஷ் பிரேமச்சந்திரன் கலந்து கொண்டார். நாங்கள் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அதைவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர் கலந்து கொள்ளவில்லை.

நாங்கள் இதன் பிரகாரம் இந்த வாரம் நாடாளுமன்றம் கூடிய பின்னர் அடுத்த கட்டமாக மீண்டும் ஒரு கூட்டான பலமான அமைப்பாகச் செயற்படுவதற்கு ஒரு முடிவை எடுத்து இருக்கின்றோம். அதன் பிரகாரம் அடுத்து வரும் நாள்களிலே நாங்கள் அழைக்க விரும்பிய தலைவர்களோடு பேசி இறுதியாக ஒரே குடையின் கீழ் ஒரே கூட்டாக செயற்படுவதற்கான ஒரு முடிவை எடுக்க இருக்கின்றோம்.

உண்மையிலேயே எல்லோரையும் அரவணைத்துப் போக வேண்டும் என்பது தான் எங்களுடைய பிரதான நோக்கம். அந்த வகையிலே நாங்கள் மீண்டும் அந்தக் கட்சிகளின் தலைவர்களிடம் இது சம்பந்தமாக கலந்தாலோசித்து நேரில் சென்று அவர்களுடன் பேசி அவர்களை இந்தப் பலமான ஒற்றுமைக்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவோம்” என்றார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 மற்றைய தமிழ்க் கட்சித் தலைவர்களுடனும் பேசுவோம்