சீனாவின் வருகையை எதிர்ப்போம்

நாம் ஏற்கமுடியாத பூகோள அரசியல் நடவடிக்கை என்றாலே சீனாவின் வருகையை எதிர்ப்போம்; கஜேந்திரகுமார்

gajen.600 300 சீனாவின் வருகையை எதிர்ப்போம்

“வடக்கில் அமைக்கப்படும் கடல் அட்டை பண்ணைகள், நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத நோக்கத்துடன் – பூகோள அரசியல் நோக்கங்களுடன் எடுக்கும் அரசியல் நடவடிக்கையாக நாங்கள் கருதினால், நிச்சயமாக எதிர்ப்போம்” என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந் தொற்றால் புதுக்குடியிருப்பில் பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு உலருணவு வழங்கும் திட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நேற்று முன்தினம் மாலை முன்னெடுத்தது. இதில் கலந்து கொண்ட போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், கொரோனா அனர்த்தத்தால் தமிழ் மக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் கடந்த ஒரு கிழமையாக வடக்கில் கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் கடல் அட்டை உற்பத்தி என்ற பெயரில் நடைபெறும் – சீன நபர்கள் இங்கு நிறுவனத்தை உருவாக்கி நடத்துகின்ற வேலைகள் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வந்துள்ளது.

பொருளாதாரம் முழுமையாக சுருங்கி போயுள்ள நிலையில், 32 ஆண்டுகள் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரோனா அடிக்குமேல் அடியாக – தலையில் சுமத்தப்பட்ட ஒரு மிகப்பெரிய கொடூரமான சுமையாக உள்ளது. தங்களுக்கு கிடைக்கக் கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தேடிக் கொண்டிருக்கின்ற நிலைதான் இன்றும் தொடர்கின்றது. இந்த பின்னணியில் தான் தங்களுக்கு எந்த விதமான வருமானமும் தொழிலும் இல்லாத இடத்தில் மக்களின் கடல் வளத்தில் தொழில் செய்யும் மக்களின் வருமானத்தையும் பறிக்கும் நடவடிக்கையை எதிர்க்கு மாறும், மக்களுக்கு உண்மை நிலையை தெரிவிக்கு மாறும் கேட்டுள்ளனர்.

வெள்ளிக் கிழமை அரியாலை கடற் பரப்பிற்கு சென்ற வேளை அங்கு ஒரு சீன நிறுவனம் நான்கு சீன பிரஜைகளின் முழு பங்களிப்புடன் கடல் அட்டைக்கான உற்பத்தி நிறுவனம் ஒன்றை உருவாக்கி குஞ்சுகளை பொரிக்க வைத்து நடவடிக்கை எடுப்பதாக சொல்லப்பட்டது. அந்த நிறுவனத்தின் முகாமையாளராக இருப்பது ஈ. பி. டி.பி. என்ற ஆயுத துணைக் குழுவின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கணேஸ் என்பவர் தான் இருக்கின்றார். இது ஆறு ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருந்தும் எந்தவிதமான வருமானத்தையும் அங்கு இருக்கக் கூடிய மக்களுக்கு வழங்கியதில்லை.

அந்த நிறுவனம் என்ன செய்கிறது என்ற கேள்வி எங்களுக்கு எழுகின்றது. இந்த விடயத்தை நாங்கள் அவர்களிடம் கேட்ட போது, அந்த கடல் அட்டை குஞ்சுகளை தாங்கள் பிரித்து கொடுப்பதில் தான் வேலை வாய்ப்பு என்றும் மறைமுகமாக 2,500 குடும்பங்களுக்கு தாங்கள் வேலை வாய்ப்பு கொடுப்பதாக தெரிவித்தார்கள். இது எங்களுக்கு அதிசயமாக இருந்தது. இதன் உண்மைத் தன்மையை நாங்கள் தேடவுள்ளோம். உண்மையில் வேலை வாய்ப்புக் குரிய விடயமாக இருந்தால் – பூகோள அரசியல் கோணங்கள் இல்லாமல் இருந்தால் – நாங்கள் எதிர்க்க மாட்டோம். அப்படி இல்லாமல் இது வெறும் முகக் கவசமாக இருந்து அதற்கு பின்னால் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத நோக்கத்துடன் பூகோள அரசியல் நோக்கங்களோடு எடுக்கின்ற அரசியல் நடவடிக்கையாக நாங்கள் கருதினால் நிச்சயமாக எதிர்ப்போம்” என்றார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 சீனாவின் வருகையை எதிர்ப்போம்