அதிகாரத்தில் பங்கு தருகிறோம் வன்முறையைக் கைவிடுங்கள் என மத்தியஸ்தர்கள் மூலம் ஆப்கான் அரசு தலிபான்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இருபது ஆண்டுகாலப் போர் பலநூறு மக்களைக் கொன்றதோடு பல இலட்சம் பேரைப் புலம்பெயரவும் வைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் 2001ல் அவர்களால் பதவியிறக்கப்பட்ட தாலிபனும் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையை அடுத்து அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறத் தொடங்கியிருக்கின்றன.
இந்நிலையில், முக்கிய நகரங்கள் தலிபான்கள் வசமாகி வருகின்றன. இதில் ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கந்தஹாரை தாங்கள் கைப்பற்றி விட்டதாக தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.
இது தாலிபன்களுக்கு முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது. இந்த நகரம் முன்பொரு காலத்தில் தாலிபன்களின் வலுவான கோட்டையாக திகழ்ந்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தானின் இராணுவ வீரர்கள், வலுவிழந்த தனது அரசாங்கத்தைக் காப்பாற்றும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில், கத்தாரில் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பான சர்வதேச ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, பிரிட்டன், உஸ்பெகிஸ்தான், கத்தார் நாட்டுப் பிரதிநிதிகளும், ஐ.நா சபை மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
இக்கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று, ஆப்கானிஸ்தான் சார்பில் மத்தியஸ்தம் பேசும் கத்தாரின் வாயிலாக, தலிபான்களுக்கு ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதில், ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் பங்கு அளிக்கிறோம் ஆனால், வன்முறையைக் கைவிடுங்கள் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.