மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே தெரிந்திருந்ததாக சாட்சியம்!

04. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உளவுத்துறை தகவல்கள் முன்கூட்டியே தெரிந்திருந்ததாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

வழக்கில் சாட்சியமளித்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, அப்போதைய பாதுகாப்பு அமைச்சராகவும், முப்படைகளின் தளபதியாகவும் இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கு இந்த உளவுத்துறை தகவல்கள் தெரிந்திருந்ததாக ஹேமசிறி பெர்னாண்டோ கூறியுள்ளார்.

அரச புலனாய்வு சேவையின் அப்போதைய தலைவர் நிலந்த ஜயவர்தனவிற்கும் இந்தத் தகவல்கள் தெரிந்திருந்ததாகவும், அவர் அதனை மறைக்கச் செயல்பட்டதாகவும் பெர்ணான்டோ குற்றம்சாட்டினார்.

தாக்குதல்களைத் தடுப்பதில் கடமையைப் புறக்கணித்ததாகத் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், உரிய தகவல்கள் முறையாக ஆராயப்படவில்லை என்றும், பொறுப்பாளர்கள் இன்னும் சுதந்திரமாக செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் உளவுத்துறை எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் செயல்படத் தவறியதன் காரணமாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கு 2023 ஜனவரி மாதம் 100 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதே வழக்கில் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு 50 மில்லியன் ரூபா இழப்பீடு விதிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள கட்டமைப்பு குறைபாடுகள் குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விசாரணைகளை மீளவும் தீவிரப்படுத்தி வருவதுடன், அண்மையில் முன்னாள் புலனாய்வு அதிகாரி சுரேஷ் சலேவும் கைது செய்யப்பட்டுள்ளார்.