தொடரும் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுகள்!

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் ஐந்தாம் நாளான நேற்று (01) மூன்று மனித எச்சங்கள் வெளிப்பட்டுள்ளன.

இன்றைய அகழ்வுடன் மொத்தமாக 244 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 240 என்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அகழ்வுப் பணியின் போது ஏற்கனவே அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக் கூட்டு தொகுதிகளில் 220 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே வடமேற்கு பகுதியாக அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சில என்புத் தொகுதிகளின் இருப்புகள் அடையாளம் காணப்பட்டிருந்தன.

அதேநேரம், நாணயத்தை ஒத்த சான்றுப் பொருட்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள் மற்றும் துறை சார் நிபுணர்கள் பங்கேற்றனர்.