இலங்கைத்தீவின் ஆட்சியதிகாரமானது சிங்கள பௌத்த பேரினவாதிகளது கைகளுக்குச் சென்றதிலிருந்து அவ் அதிகாரத்தினைப் பயன்படுத்தி, தமிழர் தேசத்திற்கு எதிராகத் தீவிரப்படுத்தப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பானது 77 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்று தமிழ்த் தேசியப் பேரவை தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியப் பேரவையின் மேதின செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் தேசத்தின் இருப்பை இனவழிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான தமிழ் மக்களது உரிமைக்கான ஆயுதப் போராட்டம் சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்களால் இனவழிப்பு யுத்தம் மூலம் மௌனிக்கச் செய்யப்பட்டது.
ஆனாலும் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை விட்டுக்கொடுக்காது தொடர்ந்தும் உறுதியாகப் போராடி வருகின்றார்கள்.
தமிழ்த் தேச மக்கள் ஒற்றையாட்சியை நிராகரித்து, தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஓர் தீர்வை 77 வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வந்திருக்கின்ற நிலையில், ஒவ்வொரு தேர்தல்களுடாகவும் தங்களது ஏகோபித்த ஆணையை வழங்கி வந்திருக்கிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், சிங்கள தேசத்திற்கும், இலங்கைத் தீவின் மீது கரிசனை கொண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கும் 2026 மே தினத்தில் தமிழ்த் தேசிய பேரவையானது நிலைப்பாடுகளை வலியுறுத்தியுள்ளது.
இதன்படி, தமிழர் தேசமானது தனது அடிப்படையான அரசியல் உரிமைகளில் உறுதியாக நின்று, சிங்கள பௌத்த பேரினாவத ஒடுக்குமுறைக்கு அடிபணியாது, அதனை எதிர்த்துநின்று, தமிழ்த் தேச அங்கீகாரத்திற்காகச் சனநாயக ரீதியாகத் தொடர்ந்து போராடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு எனும் பெயரில் புதிய அரசியல் யாப்பாகக் கொண்டுவரப்படவுள்ள ‘ஏக்கிய ராஜ்ய’ வரைபானது ஏற்கனவே தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தினை விடவும் மிகவும் பலவீனமானது என்பதனை தமிழ்த் தேசியப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, ‘ஏக்கிய ராஜ்ய’ அரசியல் யாப்பினை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற முயல்வதனை வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மக்களும் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும்.
நாட்டைப் பிரிப்பதைத் தவிர வேறொரு தீர்வுக்கும் விடுதலைப்புலிகள் தயாராக இல்லை என்ற உண்மைக்கு புறம்பான நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி, இனப்பிரச்சினைத் தீர்வுக்கு விடுதலைப் புலிகளே தடையாக உள்ளனர் என்று கூறி, சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்த தமிழினவழிப்பு போருக்கு சர்வதேசமும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.
போருக்கு பின்னரான சூழலில் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் தமிழ் தேச அங்கீகாரத்தையும், தனித்துவமான இறைமையையையும் சுயநிர்ணய உரிமையையும் வலியுத்திய சமஸ்டி தீர்வுக்கு ஆணை வழங்கி வந்துள்ளனர்.
இந்தநிலையில், தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை எட்டுவதற்கு சிறிலங்கா அரசு மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் பாரிய பொறுப்பும் சர்வதேசத்துக்கு உள்ளது என்று தமிழ்த் தேசியப் பேரவை தெரிவித்துள்ளது.
அதேவேளை, இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் போன்றே இந்த ஜே.வி.பி. அரசாங்கமும் தமிழ் மக்கள் வழங்கி வந்த ஆணைக்கு மாறாக, ‘ஏக்கிய ராஜ்ய’ அரசியலமைப்பை தமிழ் மக்கள் மீது புதிதாக திணிக்க எடுக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பும் தமிழின அழிப்பு போருக்கு ஒத்துழைப்பு வழங்கிய இதே சர்வதேச சமூகத்துக்கு உள்ளது என்றும் தமிழ்த் தேசியப் பேரவை வலியுறுத்தியுள்ளது.



